இந்தியா

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு? வெளியான முக்கிய தகவல்!

By Christon
02 May 2026, 10:23 AM
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விரைவில் உயர்த்தப்படும் என்பதை மறுக்க முடியாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளது. இதன் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு சுமார் 70 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை, தற்போதைய போர் பதற்றம் காரணமாக ஏப்ரல் இறுதியில் சராசரியாக 114 டாலரைத் தாண்டியுள்ளது. இருப்பினும், இந்தியாவில் 2022 ஏப்ரல் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச விலை உயர்வால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.20 வரையிலும், டீசலில் லிட்டருக்கு ரூ.100 வரையிலும் நஷ்டம் ஏற்படுவதாகத் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விலை உயர்வு குறித்த அரசின் விளக்கம்

சர்வதேச அளவில் எரிசக்தி செலவுகள் அதிகரித்தபோதிலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தற்போதைக்கு மாற்றமில்லை என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைதள வதந்திகளுக்குப் முற்றுப்புள்ளி

இதற்கிடையில், பெட்ரோல் விலை ரூ.10-ம், டீசல் விலை ரூ.12.50-ம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் பெயரில் ஒரு போலி அரசாணை சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB), "இந்த உத்தரவு முற்றிலும் போலியானது; இந்திய அரசு இது போன்ற எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளது.