கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்று திபெத் பகுதியில் சிக்கியுள்ள இந்தியர்கள் குறித்த விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. வெள்ளப் பாதிப்பில் இருந்து தங்களை மீட்குமாறு சுமார் 200 இந்தியர்கள் உதவி கோரியுள்ளனர். இதில் திபெத்தின் கார்சான் பகுதியில் உள்ள 95 பேர் நேபாள எல்லைக்கு அருகிலுள்ள பில்சா பகுதியையும், ஜூடுல்போவில் உள்ள 13 பேர் சஹா நகரையும் நோக்கிப் பயணித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் என அந்நாட்டுப் பிரதமரைத் தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இதன் ஒருபகுதியாக, 8 டன் மருந்துகள் மற்றும் 1 டன் உணவுப் பொருட்கள் உட்பட மொத்தம் 47.5 டன் அவசரகால நிவாரணப் பொருட்களை இந்தியா காத்மாண்டுவிற்கு அனுப்பியுள்ளது.
தற்போது வரை 288 இந்தியர்களைத் தொடர்புகொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. இதில் திரிசூலி நீர்மின் திட்டத்தில் பணிபுரியும் 73 பணியாளர்களும் அடங்குவர். காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் அவர்களைத் தொடர்புகொள்ளும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மானசரோவர் யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 37 மற்றும் 49 பேர் கொண்ட இரு குழுக்கள் உட்பட, மேற்கு வங்காளம், கேரளா மற்றும் பல மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து குழுக்களாக மொத்தம் 288 பேர் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.