இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் எழுத்துப் பத்திரங்கள் மற்றும் தனிப்பட்ட கடிதங்களை திரும்ப பெறுவதற்காக மத்திய அரசு சட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது. 2008 ஆம் ஆண்டு 51 அட்டை பெட்டிகள் அளவிலான கடிதங்களை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பெற்றுச் சென்றதாக கூறப்படுகிறது. அவர் பெற்றுச்சென்ற நேருவின் கடிதங்கள், அவரது நம்பிக்கைக்குரிய ஆவணங்களாக வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கடிதங்கள், பண்டித நேருவின் அரசியல், சமுதாய பார்வை, அவரது குடும்ப உறவுகள் மற்றும் அந்தக் கால இந்திய வரலாற்றை உணர்த்தும் வகையில் முக்கியமான கடிதங்களாக உள்ளன. அதில், இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் வைஸ்ராய் மனைவி எட்வினா மவுண்ட்பேட்டன், சோசலிஸ்ட் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் தலித் தலைவர் ஜெகஜீவன் ராம் போன்றவர்களுக்கு நேரு எழுதிய கடிதங்கள் உள்ளன. அந்தக் கடிதங்களை சோனியா காந்தி அருங்காட்சியகத்திற்கு திருப்பி தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. இவை தற்போதும் நேரு நினைவு அருங்காட்சியத்தில் இல்லாமல், காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தியின் வசம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இந்த விவகாரம் மீண்டும் எழுந்துள்ளதால், மத்திய அரசின் கலாசார அமைச்சகம், அந்த ஆவணங்களை அரசு வசமாக மீட்டெடுக்கவோ அல்லது மீண்டும் அருங்காட்சியத்திற்கு கொண்டு வரவோ சட்டரீதியான வழிமுறைகளை எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது அரசியல் கோணத்தில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. அதேசமயம், இது பாரத நாடு வரலாற்று ஆவணங்களை பாதுகாக்கும் அரசின் முயற்சி என மத்திய தரப்பினர் வலியுறுத்துகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ள உள்ளதாக கூறப்படுகிறது.