இந்தியா

நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் பதற்றம்.. தர்மேந்திர பிரதான் மகள் எடுத்த திடீர் முடிவு!

By Christon
22 Jul 2026, 03:08 PM
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மகள் நைமிஷா பிரதான், இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, தனது சமூக வலைதளக் கணக்குகளை முடக்கியுள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மகள் நைமிஷா பிரதான், தான் வெளிநாட்டில் உயர்கல்வி படித்தது தொடர்பாக இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, தனது சமூக வலைதளக் கணக்குகளை முடக்கியுள்ளார். இவர் அமெரிக்காவில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் பிளெட்சர் பள்ளியில் சட்ட மேல்படிப்பை (LLM) முடித்துள்ளார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி 'காக்ரோச் ஜனதா கட்சி' டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்ற மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தீவிரமடைந்தது. இன்ஸ்டாகிராம் பயனர்கள் பலர் நைமிஷாவின் கணக்கைக் கண்டறிந்து, அவரது பதிவுகளில் கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி கருத்துகளைப் பதிவிடத் தொடங்கினர்.

இந்தியாவில் லட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்கொள்ளும் கல்வி அமைப்பின் போதாமையினாலேயே அவர் வெளிநாட்டில் படித்ததாகப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். வசதியும் வாய்ப்பும் இருந்தால் மற்ற மாணவர்களும் வெளிநாடு சென்றுவிடுவார்கள் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் படித்த பல்கலைக்கழகத்தின் சமூக வலைதளப் பக்கங்களிலும் கல்வி அமைச்சருக்கு எதிரான முழக்கங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. நைமிஷா 2023-ல் தனது படிப்பை முடித்து, தற்போது அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டாண்மை அமைப்பில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தரப்பினர் தர்மேந்திர பிரதானின் மகள் மீதும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். "முடிவெடுக்கும் அதிகாரத்தில் இல்லாத குடும்ப உறுப்பினர்களை இதில் இழுப்பது தவறான செயல்; அதிகாரத்தில் இருப்பவர்களிடமும் அரசுப் பதவியில் இருப்பவர்களிடமே மக்கள் கேள்வி கேட்க வேண்டும்" என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.