இந்தியா

புதிய ரக மாம்பழத்திற்கு அமைச்சர் ’ராஜ்நாத் சிங்’ பெயரை சூட்டிய மாம்பழ மனிதர்!

By MUTHUKRISHNAN
07 Jun 2025, 10:48 AM
இந்தியாவின் புகழ்பெற்ற 'மாம்பழ மனிதர்' என அழைக்கப்படும் கலீமுல்லா கான், புதிதாக உருவாக்கப்பட்ட மாம்பழ இரகத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பெயரை அடிப்படையாக கொண்டு 'ராஜ்நாத் ஆம்' (Rajnath Aam) எனப் பெயரிட்டுள்ளார்.
ஜம்முவில் நடந்தேறிய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடி தரும் வகையில் இந்தியாவின் பாதுகப்புத் துறை
மேற்கொண்ட நடவடிக்கையினை கௌரவிக்கும் விதமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெயரினை புதிய இரக மாம்பழத்திற்கு சூட்டியுள்ளார் இந்தியாவின் புகழ்பெற்ற 'மாம்பழ மனிதர்' கலீமுல்லா கான்.

ஏன் அவர் மாம்பழ மனிதர்?

லக்னோவைச் சேர்ந்த கலீமுல்லா கான், இந்தியாவின் 'மாம்பழ மனிதர்' என்று உலக அழைக்கப்படுகிறார். இதற்கு காரணம், அழிவிலிருந்த பல மாம்பழ இரகங்களை மீட்டெடுத்தது மட்டுமில்லாமல், ஒட்டுதல் (grafting) தொழில்நுட்ப முறையில் பல்வேறு புதிய மாம்பழ இரகங்களை கண்டறிந்து நாட்டிற்கு அர்பணித்தும் வருகிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் மாலிஹாபாத் பிராந்தியத்தில் ஒரு காலத்தில் 1,300-க்கும் மேற்பட்ட மாம்பழ இரகங்கள் இருந்தது. ஆனால் காலப்போக்கில், பல இரகங்கள் அழியத்தொடங்கின. அதற்கு மா விவசாய சாகுபடி பரப்பளவு குறைந்ததும் ஒரு முக்கிய காரணம். 7-ஆம் வகுப்பு வரை மட்டுமே கலீமுல்லா கான் பயின்று இருந்தாலும், தன் வாழ்நாள் முழுவதையும் மாம்பழத்திற்காக அர்பணித்துள்ளார். அழிவின் விளம்பில் இருந்த, மாம்பழ இரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். ஒரு ஒற்றை மாமரத்தில் 300-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான மாம்பழங்களை விளைவித்து அவர் சாதனை படைத்துள்ளார். தாவரவியலில் ஆழ்ந்த நுண்ணறிவும், விவசாயத்தில் அர்பணிப்பு உணர்வும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். உதாரணத்திற்கு, ’அனார்கலி’ மாம்பழத்திலேயே வெவ்வேறு தோல் நிறம், வெவ்வேறு சுவையுடைய இரகங்களை கண்டறிந்துள்ளார்.

தோட்டக்கலை மற்றும் பழ சாகுபடி துறையில், இவர் ஆற்றிய பங்களிப்பை சிறப்பிக்கும் விதமாக மத்திய அரசு கடந்த 2008 ஆம் ஆண்டு கலீமுல்லா கானுக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது.

அமைச்சர் ராஜ்நாத் சிங் பெயரில் புதிய இரகம்:

கலீமுல்லா கான், தான் கண்டறியும் புதிய மாம்பழ இரகங்களுக்கு பிரபலங்களின் பெயரினை சூட்டுவதன் மூலமும் பலரின் கவனத்தை ஈர்த்தார். சச்சின் டெண்டுல்கர், ஐஸ்வர்யா ராய், நரேந்திர மோடி, அமித் ஷா, சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ் போன்ற பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்களில் அவர் மாம்பழ இரகங்களை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், தனது மாலிஹாபாத் தோட்டத்தில் தனது தனித்துவமான ஒட்டுதல் (grafting) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய மாம்பழ இரகத்தை உருவாக்கியுள்ளார். இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பெயரை குறிக்கும் வகையில் 'ராஜ்நாத் ஆம்' என பெயரிட்டுள்ளார்.

கலீமுல்லா கான் இதுகுறித்து கூறுகையில், "நாட்டிற்கு அர்த்தமுள்ள சேவையை வழங்கியவர்களின் பெயர்களை எனது மாம்பழங்களுக்குச் சூட்டுகிறேன். அவர்களின் பெயர்கள் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். ஒரு புதிய மாம்பழ வகைக்கு ஒரு அரசியல் தலைவரின் பெயரைச் சூட்டுவது, அந்தத் தலைவரின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ஒரு தனித்துவமான வழியாகும்.

காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா அமைதியை நிலைநாட்ட சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. தீவிரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்ற ராஜ்நாத் சிங்கின் உறுதியான நிலைப்பாடு தன்னை ஈர்த்தது” எனவும் கலீமுல்லா கான் தெரிவித்துள்ளார். 'ராஜ்நாத் ஆம்' என பெயரிடப்பட்டுள்ள மாம்பழ இரகமானது, ராஜ்நாத்தை போன்று உயரம் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு மாங்காவும் அரை கிலோ எடை கொண்டதாகவும் இருக்கும் என கலீமுல்லா கான் தெரிவித்துள்ளார்.

ஒரு விவசாயி தனது உழைப்பின் அடையாளமான புதிய இரகத்திற்கு அரசியல் தலைவரின் பெயரைச் சூட்டியுள்ளது மாம்பழப் பிரியர்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரங்களிலும் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.