Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

சில்லறை காசுகளுடன் மனைவிக்கு தாலி வாங்க வந்த முதியவர்.. கடை உரிமையாளரின் நெகிழ்ச்சி செயல்

By MUTHUKRISHNAN
19 Jun 2025, 03:18 PM
கையில் வெறும் ரூ.1,120 மட்டும் வைத்துக்கொண்டு, தன்னுடைய மனைவிக்கு மங்களசூத்திரம் (தாலி) வாங்க நடைக்கடைக்குள் வந்த 93 வயது முதியவர் தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் திரும்பும் திசையெல்லாம் வயதான தம்பதியினர் கண்ணீர் மல்க தாலி வாங்கும் காணொளி ஒன்றினை காண முடிகிறது. சத்ரபதி சம்பாஜிநகரில் (முன்னர் ஔரங்காபாத்) அமைந்துள்ள கோபிகா ஜுவல்லர்ஸ் நகைக்கடைக்குள் கையில் தடி ஏந்தி 93 வயதான முதியவர் ஒருவரும், அவரது மனைவியும் வருகை தந்தனர்.

அந்த 93 வயதான முதியவரின் பெயர் நிவ்ருத்தி ஷிண்டே. அவரின் மனைவி பெயர் சாந்தாபாய். வெள்ளை வேட்டி-குர்தா மற்றும் தொப்பி இதுதான் அந்த முதியவரின் அடையாளம். முதலில், கடை ஊழியர்கள் அந்த முதியவரும் அவரது மனைவியும் ஏதோ யாசகம் கேட்க வந்திருப்பதாக நினைத்தனர். ஆனால், அந்த முதியவர் தனது மனைவிக்கு தாலி வாங்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதன்பின், ஊழியர்கள் தங்கள் நகைக்கடையிலிருந்த சில டிசைன்களை அந்த தம்பதியினரிடம் காட்டுகின்றனர். அதில் தங்களுக்கு விருப்பமான ஒரு டிசைனை தேர்வு செய்கிறார்கள். கடை உரிமையாளர் தாலிக்கான விலையினை சொன்ன போது தம்பதியினர் அதிர்ச்சியுற்றனர். காரணம் அவர்களிடம் இருந்தது வெறும் ரூ. 1,120 மட்டுமே.

கடைக்காரர் சிரித்த முகத்துடன், இது போதாதே? எனத் தெரிவிக்க, 93 வயது முதியவர் தனது பையில் கையை நீட்டி 2 மூட்டை நாணயங்களை வெளியே எடுத்து மீதமுள்ள தொகையினை செலுத்த முயன்றார். கடையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் உட்பட அந்த கடையிலிருந்த அனைவரும் முதியவரின் பாசாங்கற்ற அன்பினை புரிந்துக் கொண்டு மனம் நெகிழ்ந்தனர்.

இதனையடுத்து, யாரும் எதிர்பாராத வகையில் கடையின் உரிமையாளர், ’இந்த பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் விருப்பத்திற்குரிய தாலியினை வாங்கிக் கொள்ளுங்கள்’ என தெரிவிக்க உணர்ச்சிப் பெருக்கில் அழத்தொடங்கினார் முதியவரின் மனைவி. 93 வயதான முதியவரோ, ‘பரவாயில்லை..இந்த பணத்தையாவது வைத்துக்கொள்ளுங்கள்’ என கட்டாயப்படுத்த, முதியவரின் திருப்திக்காக வெறும் ரூ.20-யினை மட்டும் பெற்றுக் கொண்டார் கடை உரிமையாளர். இதுத்தொடர்பான காணொளி தற்போது பல லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது சமூக வலைத்தளங்களில்.



ஜல்னா மாவட்டத்தில் உள்ள அம்போரா ஜஹாகிர் என்ற விவசாய கிராமத்தைச் சேர்ந்த இந்த தம்பதியினர், எல்லா இடங்களிலும் ஒன்றாகப் பயணம் செய்து வருகின்றனர். தற்போது கூட வரவிருக்கும் ஆஷாதி ஏகாதசி பண்டிகைக்காக பந்தர்பூருக்கு நடைபயணம் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடை உரிமையாளர் இதுக்குறித்து கூறுகையில்,”இந்த முதிய தம்பதியினர் பல தனிப்பட்ட துயரங்களை சந்தித்துள்ளனர். அவர்களின் மூத்த மகன் இறந்துவிட்டார். இளைய மகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். யாருடைய ஆதரவுமின்றி தனியாக வாழ்ந்தாலும், இந்த தம்பதியினர் இடையே நிலவும் அன்பு என்னை கண்கலங்க வைத்தது. எங்கள் கடைக்கு வருகைத்தந்த அந்த முதியவர் தனது மனைவிக்கு ஒரு மங்களசூத்திரம் வாங்க விரும்புவதாகக் கூறி ₹ 1,120 கொடுத்தார். அவரது அன்பினை கண்டு நான் நெகிழ்ந்து போனேன். நான் அவர்களிடமிருந்து ₹20 மற்றும் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டு மங்களசூத்திரத்தை அந்தத் தம்பதியினரிடம் கொடுத்தேன்” என்றார்.

நகைக்கடை உரிமையாளரின் நெகிழ்ச்சி செயலை அனைவரும் பாராட்டி வருவதோடு, இவ்வளவு ஆண்டுகள் கடந்த பின்னும் தம்பதியினர் இடையே நிலவும் அன்பு மெய்சிலிர்க்க வைப்பதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.