இந்தியா

திருமணமான ஆண் லிவ்-இன் உறவில் இருப்பது குற்றமல்ல: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

By Christon
28 Mar 2026, 01:36 PM
அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய ஒரு முக்கியத் தீர்ப்பில், திருமணமான ஒரு ஆண் மற்றொரு பெண்ணுடன் 'லிவ்-இன்' (Live-in) உறவில் இருப்பது சட்டப்படி குற்றமல்ல என்று தெரிவித்துள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய ஒரு முக்கியத் தீர்ப்பில், திருமணமான ஒரு ஆண் மற்றொரு பெண்ணுடன் 'லிவ்-இன்' (Live-in) உறவில் இருப்பது சட்டப்படி குற்றமல்ல என்று தெரிவித்துள்ளது. தனிமனித உரிமைகளைப் பாதுகாப்பதே நீதிமன்றத்தின் முதன்மையான கடமை என நீதிபதிகள் இந்த வழக்கில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த நேத்ராபால் மற்றும் அனாமிகா ஆகிய இருவரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு எதிராக அனாமிகாவின் தாயார் அளித்த கடத்தல் புகாரை ரத்து செய்யக் கோரி இருவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜே.ஜே. முனீர் மற்றும் தருண் சக்சேனா ஆகியோர் அடங்கிய அமர்வு, "சமூக அறநெறிகள் (Social Morality) குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நீதிமன்றத்தின் கடமையைத் தடுத்து நிறுத்த முடியாது" என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

வழக்கின் பின்னணி மற்றும் வாதங்கள்

மனுதாரர்கள் தரப்பில், தாங்கள் இருவரும் வயது வந்தவர்கள் என்றும், பரஸ்பர சம்மதத்துடன் இணைந்து வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அனாமிகாவின் தாயார் தரப்பு வழக்கறிஞர், "நேத்ராபால் ஏற்கனவே திருமணமானவர்; அவர் மற்றொரு பெண்ணுடன் வாழ்வது சட்டப்படி குற்றம்" என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒழுக்க நெறிக்கும் சட்டத்திற்கும் இடையே தெளிவான வேறுபாடுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டினர்.

நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆண் எந்தவொரு சட்டவிரோதச் செயலையும் இழைக்கவில்லை என்றும், 18 வயது நிரம்பிய பெண்ணுடன் அவர் சம்மதத்துடனேயே வாழ்ந்து வருகிறார் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. எனவே, அவர்கள் இருவரையும் பிரிக்கவோ அல்லது அவர்களது இல்லத்திற்குள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மூன்றாம் நபர்கள் அத்துமீறி நுழையவோ கூடாது என நீதிபதிகள் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வயது வந்த இருவர் தங்களின் வாழ்க்கை முறையைத் தீர்மானிக்க முழு உரிமை உண்டு என்பதை இத்தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.