அகில இந்திய மாணவர்கள் சங்கத்தின் (AISA) தலைவர் நேஹா போரா, காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) போராட்டத்தில் தனக்குப் பங்கில்லை என்றும், அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு சட்டவிரோதச் செயலிலும் தான் ஈடுபடவில்லை என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 16 ஆம் தேதி அன்று மண்டி ஹவுஸ் நோக்கிப் பேரணியாகச் சென்றபோது தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நேஹா போரா, அடுத்த நாள் விடுவிக்கப்பட்டார். எனினும், ரூ.10,000 மதிப்பிலான பிணைப்பத்திரம் வழங்கி அமைதியைப் பராமரிக்க வேண்டும் எனச் சிறப்பு நிர்வாகக் நீதிபதி (SEM) அக்டோபர் 18-ல் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸை எதிர்த்து நேஹா போரா மனு தாக்கல் செய்த நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
நேஹா போரா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், 16 ஆம் தேதி மாலை மண்டி ஹவுஸ் வந்த 10 முதல் 15 நிமிடங்களுக்குள் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்ட பதிவில் வன்முறையைத் தூண்டும் வகையிலோ அல்லது பொது அமைதியைக் கெடுக்கும் வகையிலோ எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும், ஜனநாயக அமைப்பில் ஆட்சி மாற்றம் குறித்துப் பேசுவது தவறல்ல என்றும் வாதிட்டார். மேலும், அமைதியான முறையில் கருத்து தெரிவிப்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் உரிமை என்றும் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசு மற்றும் டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா, தடை உத்தரவு நடைமுறையில் இருந்த கொனாட் பிளேஸ் பகுதியை நோக்கி நேஹா போரா மக்களைத் திரட்ட முயன்றதாகவும், தொடர்ச்சியாக விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். மேலும், வாக்களிப்பதன் மூலமே ஆட்சி மாற்றம் சாத்தியமே தவிர, டெல்லியின் இதயப் பகுதியில் கூட்டத்தைக் கூட்டி அல்ல என்றும், போதிய ஆதாரங்களின் அடிப்படையில் உரிய விசாரணைக்குப் பிறகே இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மனுதாரரின் அடிப்படை உரிமைகள் மற்றும் தனிநபர் சுதந்திரம் சார்ந்த விவகாரம் என்பதால் நீதிமன்றம் இதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.