பெங்களூருவில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையால் சர்ச் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள 'த புக்வார்ம்' கடைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இது தொடர்பாக அந்தக் கடை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்களில், புத்தகங்கள் வெள்ள நீரில் மிதப்பதும், கடைக்கு வெளியே ஆலங்கட்டிகள் குவிந்து கிடப்பதும் காண்போரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வெள்ளத்தில் சுமார் 4,000 முதல் 5,000 புத்தகங்கள் வரை (ரூ.14 லட்சம் மதிப்பு ) வீணாகிவிட்டதாகக் கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சம்மர் சீசனுக்காகக் குவிக்கப்பட்ட புதிய புத்தகங்கள்
கோடை விடுமுறையை முன்னிட்டு விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால், சமீபத்தில்தான் அதிகப்படியான புதிய புத்தகங்களைக் கடையின் உரிமையாளர் கிருஷ்ணா கொள்முதல் செய்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக, மழையில் நனைந்து வீணான புத்தகங்களில் பெரும்பாலானவை இந்த புதிய புத்தகங்களே. தற்போதைய பதிப்பகங்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களைப் பயன்படுத்துவதால், அவை தண்ணீரைத் தாங்கும் சக்தியின்றி விரைவில் சிதைந்துவிடுகின்றன என்றும், குறிப்பாக ஆஸ்டெரிக்ஸ் (Asterix) போன்ற சித்திரக் கதைகள் முழுமையாகப் பாழாகிவிட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
உதவிக்கரம் நீட்டும் வாசகர்கள்
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, வாசகர்கள் பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். நனைந்த புத்தகங்களைச் சூரிய ஒளியில் உலர்த்தி, குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உரிமையாளர் திட்டமிட்டுள்ளார். இதற்கு ஆதரவு தரும் வகையில், கடந்த ஆண்டு கொல்கத்தாவில் நடந்த 'ஈரமான புத்தகக் கண்காட்சி' (Wet Book Fair) போல, இங்கேயும் வாசகர்கள் முன்வந்து புத்தகங்களை வாங்கி உதவ வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அழுக்கடைந்த புத்தகங்களாக இருந்தாலும் பரவாயில்லை, கடையின் மீட்சிக்குத் தாங்கள் உதவத் தயார் எனப் புத்தகப் பிரியர்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
5000 books, worth over Rs 14 lakh, were destroyed after rain water gushed into The Bookworm (a book shop) on Church Street pic.twitter.com/giVkc0w4gm
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 29, 2026