குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு கடந்த 12 ஆம் தேதி மதியம் 1.38 மணியளவில் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி மீது விழுந்து வெடித்து சிதறி பெரும் விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் 69 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் காரர்கள், 7 போர்த்துகீசியர்கள், ஒரு கனேடியர், இரு பைலட்கள், 10 ஊழியர்கள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர். இந்த கோர விபத்தில் ஒரு நபரை தவிர 241 பேரும் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்தார்.
மேலும், விபத்தில் விஷவாஸ்குமார் ரமேஷ் என்ற பயணி அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். மேலும் அவர் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதால், விமானத்தில் பயணித்தவர்கள் குடும்பத்தார் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதில் சிலரது உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்கள் உடலை பெற்று சென்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் விபத்துக்குள்ளான விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. அதனை தொடர்ந்து, அங்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டது. மேலும், அதனை ஆய்வு உட்படுத்தப்பட்டு விபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர், பொதுமக்கள் என 33 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.