Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

"மூதாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லை"- மத்திய பிரதேசத்தில் அரங்கேறிய கொடூர சம்பவம்!

By Christon
09 Mar 2026, 02:19 PM
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில், 90 வயது மூதாட்டி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 90 வயது மூதாட்டி ஒருவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த மார்ச் 6-ஆம் தேதி நள்ளிரவில், அவர் உறங்கிக் கொண்டிருந்தபோது முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளது. அந்த கும்பல் தனியாக இருந்த மூதாட்டியை மிகக் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளது.

கிணற்றில் வீச முயற்சி

வன்முறைக்குப் பிறகு, அந்த மூதாட்டியைக் கட்டிலுடன் சேர்த்து அங்கிருந்த கிணற்றில் வீசி எறிய அந்த கும்பல் முயன்றுள்ளது. அப்போது மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். ஆட்கள் வருவதைக் கண்டதும் அந்த நான்கு பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பலத்த காயமடைந்த மூதாட்டி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், வயது முதிர்வு மற்றும் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக அவரது உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களின் போராட்டம் மற்றும் போலீஸ் நடவடிக்கை

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள நான்கு பேர் குறித்தும் துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.10,000 சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டுப் போராட்டம் நடத்தினர்.