கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராகப் பதவியேற்ற மூன்றே மாதங்களில் நிதீஷ் குமார் இந்த முடிவை எடுத்துள்ளார். இது குறித்து நேற்று முதல் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இன்று அவர் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நிதீஷ் குமாரின் உருக்கமான பதிவு
தனது விலகல் குறித்து நிதீஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில்,
"கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களாகிய நீங்கள் எனக்குத் தொடர்ந்து நம்பிக்கையையும் ஆதரவையும் அளித்து வருகிறீர்கள். இதனாலேயே பீகார் மக்களுக்கு நாங்கள் உண்மையாக, நேர்மையாகச் சேவை செய்து வருகிறோம். உங்களுடைய நம்பிக்கை, ஆதரவின் காரணமாகவே பீகார் இன்று வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்காகக் கடந்த காலங்களில் பலமுறை உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்.
எனது நாடாளுமன்ற வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து பீகார் சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் நாடாளுமன்றத்திலும் உறுப்பினராக வேண்டும் என்று விரும்பினேன். எனவே, இப்போது மாநிலங்களவை உறுப்பினராக, வரும் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்.
உங்களுடனான இந்த உறவு எதிர்காலத்தில் தொடரும் என்றும், பீகாரை வளர்ச்சியடைந்த மாநிலமாக உருவாக்க ஒன்றிணைந்து பணியாற்றுவேன் என்றும் நான் மனதார உறுதியளிக்கிறேன். புதிதாக அமையவுள்ள அரசுக்கு எனது முழு ஆதரவும் வழிகாட்டுதலும் இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் வெற்றி மற்றும் அரசியல் பின்னணி
2025-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. இதில் பாஜக 89 இடங்களையும், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களையும் வென்றன. எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் 25 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றன. இந்த வெற்றியைத் தொடர்ந்து நிதீஷ் குமார் 10-வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அடுத்த முதல்வர் யார்?
நிதீஷ் குமார் முதல்வர் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், அடுத்ததாக பாஜக தரப்பிலிருந்து ஒருவர் பீகார் மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகள் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.