Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

2 லட்சத்திற்கு குறைவாக இருந்தால்.. தங்க நகைகடன் குறித்து சூப்பர் அறிவிப்பு!

By MUTHUKRISHNAN
30 May 2025, 11:59 AM
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில், நகைக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
தங்க நகை கடன் பெறுவதில் சமீபத்தில் புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது அனைத்து தரப்பினர் மத்தியில், அதிருப்தியை உண்டாக்கியது. குறிப்பாக தங்க நகை கடன் பெற்றோர், வட்டி மட்டுமே கட்டி நகைக்கடனை புதுப்பித்து வந்த முறையை மாற்றி முழு தொகையையும் கட்டி மட்டுமே நகை கடன்களை ரத்து செய்து, மீண்டும் புதிதாக கடன் பெற வேண்டும் என்கிற விதியை கொண்டு வந்தது.

நகைகளின் உரிமையை நிரூபிப்பதற்கு ரசீது அல்லது உரிமைச் சான்று போன்ற ஆவணங்களை அளிக்க வேண்டும். நகை கடைகளில் வாங்கப்பட்ட தங்க காசுகளுக்கு நகை கடன் கொடுக்கப்பட மாட்டாது. 75% மட்டுமே நகையின் மதிப்பில் கடன் வழங்கப்படும். நகைக்கடன் பெறும் போது, கடன் பெறுபவரின் திருப்பி செலுத்தும் திறனோடு பொருந்துகிறதா என்பதை உறுதி செய்வது அவசியம் என அடுக்கடுக்காக புதிய விதிகளை விதித்தது ரிசர்வ் வங்கி.

தங்க நகைகள் என்பது பல பத்தாண்டுகளாகவோ அல்லது இரண்டு மூன்று தலைமுறையாகவோ இருந்து வரும் நிலையில் மூல ரசீதுக்கோ அல்லது உடமை உரிமை ஆவணமோ பெறுவது எளிதல்ல. நகைக்கடன் என்பது எளிய, நடுத்தர மக்கள் கடன் பெறுவதற்கான கடைசி புகலிடமாகும். வங்கிகளைப் பொறுத்த வரை நூறு சதவிகிதம் லாபம் ஈட்டுதல் மட்டுமல்ல வராக்கடன் என்கிற பிரச்சனையே இதில் இல்லை. அப்படி இருக்கும் சூழலில் நகைக்கடன் மீது புதிதாக இவ்வளவு கடுமையான விதிமுறைகளை ரிசர்வு வங்கி ஏன் விதித்துள்ளது என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோரும், இந்த புதிய வழிகாட்டுதல் விதிமுறைகளை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தற்போது நிதி அமைச்சரின் தலையீட்டின் பேரில் நிதித்துறை செயலாளர் ரிசர்வ் வங்கிக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.



அதன்படி, உடனடியாக அமலுக்கு வருமென்று அறிவிக்கப்பட்ட புதிய நகைக் கடன் விதிமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக சில பரிந்துரைகள் மத்திய அரசு சார்பில் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவற்றை பரிசீலித்து அவசரப்படாமல் புதிய வழிகாட்டுதல் நெறிமுறையினை ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு கொண்டு வருமாறும் கூறப்பட்டுள்ளது.

இதுத்தொடர்பான அறிவிப்பில், ”சிறிய தொகைக்கு நகைக்கடன் பெறுவோர் பாதிக்கப்படாதவாறு, புதிய விதிமுறைகளில் சில பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியிடம் கூறியுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக நகைக்கடன் பெறுவோர், இந்த புதிய விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி இதனை பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.

நிதி அமைச்சகத்தின் முடிவு: சு.வெங்கடேசன் வரவேற்பு

இதுக்குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், ” நிதி அமைச்சரின் தலையீட்டின் பேரில் நிதித்துறை செயலாளர் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். உடனடியாக அமலுக்கு வருமென்று அறிவிக்கப்பட்ட புதிய நகைக் கடன் விதிமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

அவசரப்படாமல் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு கொண்டு வருமாறும் கூறப்பட்டு இருப்பது முதல் வெற்றி. எளிய நகைக் கடன்தாரர்கள் பாதிப்புக்கு ஆளாகாமல் கவனம் கொள்ளவும், ரூ 2 லட்சம் கடனுக்கு கீழான விண்ணப்பதாரர்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள நிபந்தனைகளில் இருந்து விதி விலக்கு அளிக்குமாறும், அவர்களுக்கு கடன்கள் தாமதமின்றி விரைவில் வழங்கப்பட ஆவன செய்யுமாறும், பொது வெளியில் எழுந்துள்ள கவலைகளை கணக்கில் கொண்டும் விதி முறைகளை வகுக்குமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது மக்களின் குரலுக்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி. எனது கவனத்திற்கு இப் பிரச்சினையை கொண்டு வந்த பொது மக்களின் உணர்வுகளை ஒன்றிய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன். நேரில் சந்தித்த போது உறுதி அளித்தபடி உடனடி தலையீட்டை செய்துள்ள மாண்புமிகு நிதியமைச்சருக்கு நன்றி. விதிமுறைகளை இறுதி செய்யும் போது எளிய நடுத்தர மக்களை, சிறு தொழிலகங்கள் - வணிகர்களை - விவசாயிகளை பாதிக்கக் கூடிய எல்லா நிபந்தனைகளையும் மேற்கூறிய அறிவுறுத்தலைகளை கணக்கில் கொண்டு ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுமென்று நம்புகிறேன். கூடுதல் கடன்கள் கிடைப்பதில் தற்போது உள்ள சிரமங்களும் களையப்பட வேண்டுமென்று நிதியமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.