இந்தியா

எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்..! மாணவர்கள் மீது தடியடி.. மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்!

By Christon
22 Jul 2026, 12:35 PM
நீட் தேர்வுக்கு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி தொடர்பான மனுவை அவசர வழக்காக பட்டியலிடவும் உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
டெல்லியில் நீட் தேர்வு மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) சீர்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின் போது மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி தொடர்பான மனுவை அவசரமாக விசாரிக்கவும், தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யவும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 20-ம் தேதி காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி ‘சலோ சன்சத்’ பேரணியாகச் சென்றனர். அப்போது போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீற முயன்றதால், அவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பேரணியைக் கலைத்தனர். இந்தச் சம்பவத்தில் பல மாணவர்கள் காயமடைந்தனர்.

இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களைச் சமர்ப்பித்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் வழக்கறிஞர் ஒருவர் முறையிட்டார். லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான விஷயம் என்பதால் நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும் எனக் கோரினார்.

ஆனால் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், "எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்; உங்கள் நேரத்தையும் வீணாக்காதீர்கள். வீடியோக்களைப் பார்க்க எங்களுக்கு நேரமில்லை" எனக் கூறி அவசர விசாரணைக்கு மறுத்துவிட்டனர்.

முன்னதாக, டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா அமர்விலும் இந்த விவகாரம் முறையிடப்பட்டது. அப்போது, "இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை இழுக்க வேண்டாம்" எனக் கூறி டெல்லி உயர்நீதிமன்றமும் அவசர விசாரணை நடத்த மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை வழக்குகள் எதையும் பதிவு செய்யக் கூடாது என்ற புதிய கோரிக்கையையும் காக்ரோச் ஜனதா கட்சி முன்வைத்துள்ளது.