டெல்லியில் செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியான மருத்துவர் உமர் முகமதுவின் வீடு, தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
டெல்லி கார் குண்டு வெடிப்பு
டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த 10 ஆம் தேதி மாலை ஹூண்டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்தவர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பான விசாரணையில், வெடிபொருளுடன் கூடிய அந்த காரை ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி ஓட்டி வந்தது தெரியவந்தது. வெடித்த காரில் இருந்து சேகரிக்கப்பட்ட உடற்பாகங்கள் மற்றும் உமரின் தாயாரிடம் சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரியை பகுப்பாய்வு செய்ததில் அந்த இரண்டும் ஒத்துப்போவது உறுதியானது. இதனடிப்படையில் காரை மருத்துவர் உமர் ஓட்டி வந்தது உறுதி செய்யப்பட்டது
பயங்கரவாதிக்கு எதிரான நடவடிக்கை
இந்த நிலையில், இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கையை விடுக்கும் நோக்கில், புல்வாமாவில் உள்ள உமரின் வீடு பாதுகாப்புப் படையினரால் இன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டது. பாதுகாப்பு படையினர் ஐஇடி வெடிபொருட்களை பயன்படுத்தி வீட்டை தகர்த்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் வீடுகளுக்கு எதிராகவும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.