Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

புதுச்சேரியில் காருக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம்.. கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

By Christon
15 Sep 2025, 11:21 AM
புதுச்சேரியில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து, அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி நகரப் பகுதியான அண்ணா நகரில் உள்ள வீட்டு வசதி வாரியம் அலுவலகம் அருகே தனியாக நின்றிருந்த காரின் அடிப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. மேலும், அதன் அடிப்பகுதியில் ரத்தம் உறைந்து கிடந்ததை அப்பகுதி மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து உருளையன் பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காரின் கதவைத் திறந்து பார்த்தபோது, உள்ளே அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முதற்கட்ட விசாரணை

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த கார் அண்ணா நகர் அருகே உள்ள கே.சி. நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராமு என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. கடந்த 29-ஆம் தேதி நடைபெற்ற அன்னை வேளாங்கண்ணி ஆலயக் கொடியேற்ற விழாவிற்குச் சென்று திரும்பிய ராமு, 30-ஆம் தேதி வழக்கமாகத் தனது காரை நிறுத்தும் இடமான வீட்டு வசதி வாரியம் அருகே நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். கடந்த 15 நாட்களாக கார் அங்கிருந்து எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பல்வேறு கோணங்களில் விசாரணை

இந்நிலையில், காரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

காருக்குள் எப்படி ஆண் சடலம் வந்தது? யாரேனும் கொலை செய்து உள்ளே போட்டுவிட்டுச் சென்றார்களா? அல்லது காரின் உரிமையாளரான ஆட்டோ டிரைவர் ராமு இதில் சம்பந்தப்பட்டிருக்கலாமா? அல்லது தனியாக நின்றிருந்த கார் என்பதால் யாரும் அறியாமல் தற்கொலை செய்திருக்கலாமா? எனப் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் முக்கியமான நகரப் பகுதியில் காருக்குள் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.