Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

ஏர் இந்தியா விமான விபத்து கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் மீட்பு.. விசாரணை தீவிரம்!

By VASUKI
27 Jun 2025, 12:58 AM
ஏர் இந்தியா விமானத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், அவ்விமானத்தின், கருப்புப் பெட்டியில் இருந்த தரவுகள் மீட்கப்பட்டதாகவும், தகவல்களை பிரித்தெடுத்து விசாரிக்கும் பணிகள் நடப்பதாகவும் தகவல் பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள் மூலம் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க ஆய்வு நடக்கிறது - விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு கடந்த 12 ஆம் தேதி மதியம் 1.38 மணியளவில் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி மீது விழுந்து வெடித்து சிதறி பெரும் விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் 69 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் காரர்கள், 7 போர்த்துகீசியர்கள், ஒரு கனேடியர், இரு பைலட்கள், 10 ஊழியர்கள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர். இந்த கோர விபத்தில் ஒரு நபரை தவிர 241 பேரும் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. மேலும், விபத்தில் விஷவாஸ்குமார் ரமேஷ் என்ற பயணி அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர், பொதுமக்கள் என 33 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை 274 ஆக உயர்ந்தது. தற்போது, இந்த விபத்துக்கான காரணங்களை கண்டறிய முக்கிய ஆதாரமாக கருதப்படும் விமானத்தின் கருப்புப் பெட்டி (Black Box)-யில் இருந்த முக்கிய தரவுகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த கருப்புப் பெட்டியில், விமானம் பறந்த நேரத்தில் பதிவான Cockpit Voice Recorder (CVR) மற்றும் Flight Data Recorder (FDR) ஆகியவை உள்ளன. இவற்றின் பதிவுகள் தற்போது பிரித்தெடுக்கப்பட்டு, விபத்துக்கு வழிவகுத்த காரணங்களை ஆராயும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“மீட்கப்பட்ட தரவுகள் மூலம் விமானியின் உரையாடல், விமானம் கடைசி நேரத்தில் எந்தெந்த தொழில்நுட்ப சிக்கல்களை சந்தித்தது, மற்றும் விமான செயல்பாடுகள் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான துறையின் விசாரணை குழுவும், தொழில்நுட்ப நிபுணர்களும் இணைந்து இந்தப் பதிவுகளை பரிசோதித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு தற்காலிக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துக்கும், விமான நிலைய நிர்வாகத்துக்கும் மேலதிக கேள்விகள் எழுந்துள்ளன.