வேலையில்லாத இளைஞர்கள் குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கூறியதாகப் பரவிய விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சமூக வலைதளங்களில் தொடங்கப்பட்டுள்ள ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janta Party) என்ற இயக்கம் இணையத்தில் பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, போலி சான்றிதழ் விவகாரம் தொடர்பாகப் பேசிய தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலையில்லாத இளைஞர்களைச் சமூகத்தின் 'கரப்பான்பூச்சிகள்' மற்றும் ஒட்டுண்ணிகள் என விமர்சித்ததாகத் தகவல் பரவி சர்ச்சையானது. தான் அவ்வாறு கூறவில்லை என நீதிபதி தரப்பில் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், இளைஞர்கள் மத்தியில் இது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சமூக ஊடகப் பிரிவு வியூகாளரான அபிஜித் தீப்கே என்பவர், மே 16 அன்று 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (CJP) என்ற இயக்கத்தைத் தொடங்கினார்.
கவர்ச்சிகரமான கொள்கைகளும் ஆதரவும்
"மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயக மற்றும் சோம்பேறி" என்ற கொள்கை முழக்கத்துடன், சிஸ்டத்தால் மறக்கப்பட்ட வேலையில்லாத இளைஞர்களின் குரலாக இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் இதில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். இவர்களது 5 முக்கிய வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையில், ஓய்வுபெறும் தலைமை நீதிபதிகளுக்கு மாநிலங்களவை (Rajya Sabha) எம்பி பதவி வழங்கக் கூடாது, கட்சி தாவும் மக்கள் பிரதிநிதிகளுக்கு 20 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் மஹூவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் போன்ற பிரபல அரசியல்வாதிகளும் சமூக ஊடகங்கள் வாயிலாக இதில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளது பரபரப்பைக் கூட்டியுள்ளது.
சமூக ஊடக சாதனை
தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே இந்த நையாண்டி இயக்கம் டிஜிட்டல் தளத்தில் ஆளும் பா.ஜ.க-வையே முந்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பா.ஜ.க-விற்கு 8.7 மில்லியன் (87 லட்சம்) பின்தொடர்பாளர்கள் (Followers) உள்ள நிலையில், இந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி 10 மில்லியனுக்கும் (1 கோடி) அதிகமான பின்தொடர்பாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தில் இன்னும் பதிவு செய்யப்படாத இந்த இயக்கம், வெறும் இணையவழி எதிர்ப்பாக நின்றுவிடுமா அல்லது முழுமையான அரசியல் கட்சியாக மாறுமா என்ற கேள்வி இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது.