Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

One Nation One Election : ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டம்... 3 மசோதாக்கள் கொண்டு வர மத்திய அரசு தீவிர ஆலோசனை!

By Kalandhai
30 Sep 2024, 04:07 PM
One Nation One Election Bills : ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 3 மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு தீவிர ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

One Nation One Election Bills : ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக 3 மசோதாக்கள் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.  மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லை எனவும், அதனால் ஜனநாயகம் தோற்றுவிடும் என்றும் எச்சரித்து வருகின்றனர். ஆனாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.   

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. அந்தக் குழு செய்த பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது, தேர்தல் சீர்திருத்தங்களுக்கான மிகப் பெரிய நடவடிக்கை என்றும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது. குழுவின் பரிந்துரைகளின் படி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த இரண்டு முக்கிய அரசியலமைப்பு திருத்தங்கள் தேவைப்படும். இதன்கீழ் அரசியலமைப்பின் 83-வது, 172-வது பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

ஆனால், தற்போதைய மக்களவையில் பா.ஜ.கவுக்கு 240 இடங்கள் மட்டுமே உள்ளது. இதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க மோடி அரசுக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவை. இதனடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைக்கு கொண்டு வருவது மத்திய அரசுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது. அதேபோல், நாடாளுமன்றம், சட்டமன்றம் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு மாநில கட்சிகளும் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கான மசோதாவை நிறைவேற்றுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் மத்திய அரசுக்கு உள்ளன. இந்நிலையில், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில், முதல் மசோதா கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது.  உள்ளாட்சித் தோ்தல்களுக்கு மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஆலோசித்து வாக்காளா் பட்டியலை தயாரிப்பது தொடா்பாக 2வது மசோதாவும், யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை பதவிக் காலத்தை பிற மாநில சட்டப்பேரவைகள், மக்களவை பதவிக் காலத்துடன் இணைக்கும் வகையில் 3வது மசாதோவும் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மசோதாக்கள் வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.