Kumudam News 24 X 7 AMP Article
இந்தியா

பாத்ரூமில் அமர்ந்தவாறு நீதிமன்ற விசாரணையில் ஆஜராகிய நபர்.. வைரலாகும் வீடியோ

By MUTHUKRISHNAN
28 Jun 2025, 03:25 AM
காணொலி வாயிலான நீதிமன்ற விசாரணையின் போது, ஒருவர் கழிப்பறையில் இருந்தபடியே பங்கேற்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத் உயர் நீதிமன்றத்தின் ஒரு வழக்கு விசாரணை ஆன்லைன் வாயிலாக நடைப்பெற்ற போது வழக்கு தொடர்ந்திருந்த நபர்கள் காணொலி மூலம் பங்கேற்றிருந்தனர். அப்போது ஒருவர் கழிப்பறையில் அமர்ந்தவாறு விசாரணையில் பங்கேற்றது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், இதுத்தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வழக்கின் விசராணையானது கடந்த ஜூன் 20 ஆம் தேதி, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி நிஸ்ஸார் எஸ்.தேசாய் முன்னிலையில் நடைபெற்ற போது இந்தச் சம்பவம் நடைப்பெற்றுள்ளது. நீதிமன்றங்கள் தொடர்பான செய்திகளை தொகுத்து வழங்கும் 'பார் அண்ட் பெஞ்ச்' (Bar and Bench) இந்த வீடியோவை தனது சமூக ஊடகப்பக்கத்தில் பகிர்ந்த பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காணொலியில் சமத் பேட்டரி என்ற பெயரில் தோன்றிய அந்த நபர், ஆரம்பத்தில் புளூடூத் இயர்போன்களுடன் கேமராவுக்கு நெருக்கமாக அமர்ந்திருந்தார். ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு, கேமரா கோணம் மாறியது. அப்போது அவர் ஒரு கழிப்பறையில் அமர்ந்திருப்பது தெரியவந்தது.கழிப்பறையை அந்த நபர் பயன்படுத்திய காட்சிகளும் காணொலியில் தெளிவாக தெரிந்தது. இதனை கண்டு மற்றொரு திரையில் தோன்றிய பெண் முகம் சுளிப்பதை வைரலாகி வரும் வீடியோவில் காண முடியும். சிறிது நேரம் கழித்து அந்த நபர் வேறு ஒரு அறையிலிருந்து மீண்டும் திரையில் தோன்றினார். அவர் கழிவறையினை பயன்படுத்திய போது நீதிபதி அதை கவனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கானது நீதிமன்றப் பதிவுகளின் படி முதல் தகவல் அறிக்கையை (FIR) ரத்து செய்வது தொடர்பானதாகும். கழிப்பறையினை பயன்படுத்திய நபர் எதிர் மனுதாரர் ஆவார். வழக்கில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் சுமூகமாக தீர்வு கண்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து FIR ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது தகாத முறையில் நடந்து கொள்வது இது முதல் முறையல்ல. வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜரானபோது சிகரெட் புகைத்ததாகக் கண்டறியப்பட்ட ஒரு வழக்கறிஞருக்கு குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் ₹50,000 அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

வைரலாகி வரும் இந்த வீடியோ இணையத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளத்தில் பல பயனர்கள் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக அந்த நபரை தண்டிக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர், இன்னும் ஒரு சிலர் இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கலாய்த்து நகைச்சுவையாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.