இந்தியா

மோடியை சந்தித்த அமேசான் சிஇஓ... இந்தியாவில் ரூ.1.08 லட்சம் கோடி முதலீடு !

By Sumalekha
25 Jun 2026, 06:08 PM
உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான Amazon நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாசி, பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் இன்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்தச் சந்திப்பில், இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக அமேசான் நிறுவனம் கூடுதலாக ரூ.1.08 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முதலீடுகளுடன் சேர்த்து, 2026 முதல் 2030 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் மொத்தம் ரூ.4 லட்சம் கோடி முதலீடு செய்ய அமேசான் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த புதிய முதலீட்டின் பெரும்பகுதி, அமேசானின் கிளவுட் சேவை பிரிவான Amazon Web Services (AWS) மூலம் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள டேட்டா சென்டர்களின் திறனை அதிகரிக்க பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் இந்திய ஸ்டார்ட்-அப்கள், அரசு அமைப்புகள் மற்றும் பெருநிறுவனங்கள் மேம்பட்ட ஏஐ வசதிகள் மற்றும் பாதுகாப்பான கிளவுட் சேவைகளைப் பெற முடியும்.

மேலும், இந்த முதலீட்டு திட்டங்கள் மூலம் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 38 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க ஆதரவளிக்கப்படும் என ஆண்டி ஜாசி தெரிவித்துள்ளார்.

அமேசான் நிறுவனம், 2030-க்குள் இந்தியாவின் இ-காமர்ஸ் ஏற்றுமதியை ரூ.6.68 லட்சம் கோடி அளவிற்கு உயர்த்தும் இலக்கையும் நிர்ணயித்துள்ளது. அதோடு, 1.5 கோடி சிறு மற்றும் குறு வணிக நிறுவனங்களுக்கு ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்களை கொண்டு சேர்க்கும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேகமான விநியோக சேவையை விரிவுபடுத்தும் நோக்கில், இந்த ஆண்டிற்குள் 20-க்கும் மேற்பட்ட புதிய கிடங்குகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விநியோக மையங்களை திறக்கவும் அமேசான் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 3 மற்றும் 4-ஆம் கட்ட நகரங்களிலும் விரைவான டெலிவரி சேவைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவில் உள்ள 40 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏஐ கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இச்சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதள பதிவில், “அமேசானின் இந்த மிகப்பெரிய முதலீட்டை வரவேற்கிறேன். இது இந்திய இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, உலக முதலீட்டாளர்களின் இந்தியா மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.