இந்தியா

16 நாள் மாணவர்கள் போராட்டம் வெற்றி... ஜார்கண்டில் JSSC-CGL தேர்வுகள் ரத்து

By Sumalekha
18 Aug 2026, 10:38 AM
ராஞ்சியில் உள்ள ஜார்கண்டில் 16 நாட்களாக நடந்து வந்த மாணவர்கள் போராட்டத்தின் விளைவாக JSSC-CGL தேர்வை ரத்து செய்யப்பட்டு வெற்றி கண்டுள்ளனர்.
பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஜார்க்கண்டில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. JSSC-CGL தேர்வையும், 2014 முதல் TDPL நிறுவனம் நடத்திய அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாக முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடைபெற்ற நீண்ட நேர அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், TDPL நிறுவனம் நடத்திய தேர்வுகளின் முடிவுகளையும் ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

16 நாள் உண்ணாவிரதம் முடிவு:

தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், JSSC-CGL தேர்வை ரத்து செய்யக் கோரியும் மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து, ராஞ்சியில் உள்ள சதார் மருத்துவமனையில் அமைச்சர்கள் தீபிகா பாண்டே சிங் மற்றும் இர்பான் அன்சாரி முன்னிலையில் தனது 16 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மஹ்தோ முடித்துக் கொண்டார்.

இந்தப் போராட்டம் ஜூலை 2-ஆம் தேதி தொடங்கியதாகவும், ஜூலை 20-ஆம் தேதி முதல்வருடன் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து ஜூலை 28-ஆம் தேதி CID விசாரணை தொடங்கியதாகவும் மஹ்தோ தெரிவித்தார்.

கடுமையான சட்டங்கள் தேவை:

தேர்வுகளை முறையாகக் கண்காணிக்கவும், வினாத்தாள் கசிவைத் தடுக்கவும் கடுமையான சட்டங்களும் தேர்வு சீர்திருத்தங்களும் தேவை என்று மஹ்தோ வலியுறுத்தினார்.

தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் மாநில அமைச்சர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

புதிய தேர்வு சீர்திருத்தக் குழு:

பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமிதாப் கௌஷல் தலைமையில் தேர்வு சீர்திருத்தக் குழு அமைக்கப்படும் என்றும் முதல்வர் சோரன் அறிவித்துள்ளார்.

மாணவர்களின் போராட்டத்திற்கு முக்கிய காரணமாக இருந்த JSSC-CGL தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

“இது துணிச்சலான முடிவு”:

தேர்வை ரத்து செய்வது எளிதான முடிவு அல்ல என்றும், ஆட்சேர்ப்பு நடைமுறை ஏற்கனவே இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த நிலையில் அரசு இந்த முடிவை எடுத்திருப்பது துணிச்சலான நடவடிக்கை என்றும் மஹ்தோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாணவர்கள், அரசு, அரசியல் தலைவர்கள், ஊடகங்கள் மற்றும் போராட்டத்தின்போது ஆதரவளித்த பொதுமக்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.