Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

'ஆவேஷம் 2' எப்போது?- மாஸ் அப்டேட் கொடுத்த பகத் பாசில்!

By Christon
09 Feb 2026, 01:43 PM
'ஆவேஷம்' இரண்டாம் பாகம் உருவாகும் என ஃபஹத் ஃபாசில் தெரிவித்துள்ளார்.
ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான 'ஆவேஷம்' திரைப்படம், இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வசூலிலும் வரவேற்பிலும் சாதனை

2024 ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியான 'ஆவேஷம்', கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. பகத் பாசிலின் துடிப்பான நடிப்பு, 'எடா மோனே' (Eda Mone) என்ற அந்த ஒற்றை வசனம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது. ஹிப்ஸ்டர், ரோஷன் ஷனவாஸ் உள்ளிட்ட இளம் நட்சத்திரங்களுடன் பகத் பாசில் இணைந்து செய்த அலப்பறைகள் தியேட்டர்களை அதிரவைத்தன. உலகளவில் இப்படம் சுமார் 125 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்ற 'இலுமினாட்டி' பாடல் மற்றும் பகத் பாசிலின் ரீல்ஸ் வீடியோக்கள் இணையதளங்களில் இன்றும் டிரெண்டிங்கில் உள்ளன.

சூர்யா 47

'ஆவேஷம்' படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் தற்போது சூர்யா நடிக்கும் 'சூர்யா 47' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இதன் பணிகளை முழுமையாக முடித்த பிறகே, அவர் 'ஆவேஷம்' இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியீடு எப்போது?

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய பகத் பாசில், 'ஆவேஷம் 2' உருவாவது உறுதி என்று தெரிவித்துள்ளார். இந்தப் படம் 2027 அல்லது 2028-ஆம் ஆண்டுகளில் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ரங்கன் கதாபாத்திரத்தின் முன்கதையா (Prequel) அல்லது தொடர்ச்சியா (Sequel) என்பது குறித்த எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் எகிறத் தொடங்கியுள்ளது.