சினிமா

தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம்- வருத்தம் தெரிவித்த ‘கிங்டம்’ படக்குழு!

By Christon
06 Aug 2025, 03:54 PM
ஈழத் தமிழர்களைத் தவறாகச் சித்தரித்திருப்பதாகக் ‘கிங்டம்’ படத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், படக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது.
கெளதம் தின்னனுரி இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'கிங்டம்' திரைப்படம், ஈழத் தமிழர்களைத் தவறாகச் சித்தரித்திருப்பதாகக் கூறி தமிழகத்தில் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தமிழக மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகப் படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

படத்திற்கு எழுந்த எதிர்ப்பு

கடந்த ஜூலை 31ஆம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான 'கிங்டம்' திரைப்படத்தில், ஈழத் தமிழர்களை மிக மோசமாகச் சித்தரித்துள்ளதாகப் பல்வேறு அரசியல் தலைவர்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வந்தனர். குறிப்பாக, நாம் தமிழர் கட்சியினர் தமிழகத்தில் படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு, படத்தின் பேனர்களைக் கிழித்தெறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

படக்குழுவின் விளக்கம் மற்றும் வருத்தம்

இந்த எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், 'கிங்டம்' படத்தைத் தயாரித்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “எங்கள் 'கிங்டம்' திரைப்படத்தின் சில காட்சிகள் தமிழ் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியதாகக் கேள்விப்பட்டோம். தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்."

"இந்தக் கதை முற்றிலும் கற்பனையானது என்பதைப் படத்தின் மறுப்புப் பகுதியில் (disclaimer portion) குறிப்பிட்டுள்ளோம். இதையும் மீறி மக்களின் உணர்வுகள் ஏதேனும் வகையில் புண்பட்டிருந்தால், அதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். 'கிங்டம்' திரைப்படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.