Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

சின்ன மருமகள் சீரியல் வெற்றி- ரசிகர்களுக்கு விருந்து வைத்த விஜய் டிவி

By MUTHUKRISHNAN
28 Jun 2025, 11:54 PM
"சின்ன மருமகள்" நெடுந்தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில், ரசிகர்களுக்காக பிரத்யேகமாக விருந்து வைத்து கொண்டாடியுள்ளது விஜய் டிவி.
தமிழகத்தின் விருப்பமான தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், தற்போது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு தோறும் 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "சின்ன மருமகள்" நெடுந்தொடர், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், மக்களுடன் இணைந்து உரையாடி, அவர்களுக்கு விருந்து வைத்துக் கொண்டாடியுள்ளது விஜய் டிவி.

பெண்களை மையப்படுத்திய தமிழ் சீரியலுக்கு எப்போதுமே தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப பிரச்னைகளை அழுத்தமாகப் பேசி, பெண் சக்தியின் பெருமையைப் பேசும் வகையில் ஒளிப்பரப்பாகி வரும் சின்ன மருமகள் தொடர், பெண்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அதிலும் கடந்த இரு வாரங்களாகப் பரபரப்பான கதைக்களத்தில் நகரும் இந்த சீரியல், பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதனைக் கொண்டாடும் விதமாக மதுரை மற்றும் விருதுநகரில் சிறப்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பிரத்யேகமாக, சின்ன மருமகள் சீரியல் ரசிகர்கள் 50 பேர் கலந்துகொண்டனர். பெண்களின் வாழ்க்கையில் நிகழும் நிகழ்கால பிரச்சனைகள், அவர்களுக்கு வரும் தடங்கல்கள், குடும்ப சிக்கல்கள் என சீரியலில் வருவது போலவே, தங்களின் சொந்தக் கதைகளை, குழுவினருடன் ரசிகர்கள் உணர்வுப்பூர்வமாக பகிர்ந்துகொண்டனர். சீரியல் குழுவினர் ரசிகர்களின் கதைகளைக் கேட்டு, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து, அவர்களோடு மகிழ்வோடு உரையாடி மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து ’சின்ன மருமகள்’ தொடரின் தற்போதைய பரபரப்பான மொய் விருந்தை அடையாளப்படுத்தும் விதமாக, ரசிகர்களுக்கு அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. ரசிகர்களுடன் படக்குழுவினரும் உணவருந்தி மகிழ்ந்தனர்.

இதன் பின்பு விஜய் டிவி சீரியல் நடிகர், நடிகையர்கள், குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு, சூப்பர் சிங்கர் முதலான விஜய் டிவி நிகழ்ச்சியின் பிரபலங்கள் அனைவரும் கலந்துகொள்ள, ரசிகர்கள் முன்னிலையில் ஆடல் பாடலுடன் நிகழ்வு களைக்கட்டியது. இந்த நிகழ்வில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.