சினிமா

2 வருடம்.. 10 இயக்குநர்கள்.. சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வேல்ஸ்!

By MUTHUKRISHNAN
27 Jun 2025, 09:38 PM
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய 10 இயக்குநர்களுடன், முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் கைக்கோர்க்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், தனது தயாரிப்பில் 2025-2027-ம் ஆண்டுகளுக்கு இடையே எந்தெந்த இயக்குனர்களுடன் கைக்கோர்க்க போகிறது என்கிற பட்டியலை அறிவித்துள்ளது. இதில் வெற்றிமாறன், மாரி செல்வராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற இயக்குனர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

எல்கேஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு என தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பு நிறுவனம் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரான, டாக்டர் ஐசரி கே.கணேஷ் தொடர்ந்து இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.

சமீபத்தில் கூட யூடியூப் வலைத்தளத்தில் பிரபலமான வி.ஜே.சித்து இயக்கும் முதல் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரித்து வருகிறார். இந்நிலையில் யாரும் எதிர்ப்பாராத வகையில் அடுத்த 2 ஆண்டுகளில் 10 இயக்குனர்களுடன் கைக்கோர்க்க உள்ளதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்.

யார் அந்த 10 இயக்குநர்கள்?

இந்த பட்டியலில் சுந்தர் சி, கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பிரேம் குமார், ஜூட் ஆந்தனி ஜோசப், அருண்ராஜா காமராஜ், விக்னேஷ் ராஜா, செல்ல அய்யாவு மற்றும் கணேஷ் கே. பாபு உள்ளிட்ட இந்திய சினிமாவின் மிகவும் திறமையான மற்றும் நம்பிக்கைக்குரிய திரைப்பட இயக்குனர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

சுந்தர்.சி தற்போது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என தொட்டதெல்லாம் ஹிட் என தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக உருவெடுத்துள்ள மாரி செல்வராஜூடன் வேல்ஸ் ஃபிலி இன்டர்நேஷனல் கைக்கோர்க்க உள்ளது சினிமா ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

96, மெய்யழகன் மூலம் மனதினை வருடிய பிரேம் குமாரின் அடுத்த படம் என்னவாக இருக்கும்? என ரசிகர்கள் ஆவலாய் இருந்த நிலையில் அவரது படம் குறித்தும் முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல். சமீபத்தில் சிம்பு, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல் ஒன்று வெளியானது. அந்தப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளதாக பேச்சு எழுந்த நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது எனலாம்.

மற்ற இயக்குநர்களும் தமிழ் சினிமாவில் விமர்சன ரீதியிலான வெற்றிப் பெற்ற படங்களை இயக்கிய இயக்குநர்கள் என்பதால் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அறிவிப்பு. இயக்குநர்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இவர்கள் இயக்கப்போகும் படம் என்ன? அதில் பணியாற்ற உள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் யார்? என்கிற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

View this post on Instagram

A post shared by Vels Film International (@velsfilmintl)