- வி.ராம்ஜி
பாடல்களைக் கேட்டால் இசையமைப்பாளர் யார் என்பதைச் சொல்லிவிடுவோம். ஆனால், ‘இது இளையராஜா பாட்டு போல இருக்கே?’ என்று பல பாடல்களைக் கேட்டுவிட்டு, பலரும் கொண்டாடியிருக்கிறார்கள். ஆனால் அந்தப் பாடல்களுக்கு இசையமைத்தவர் யாரென்று பார்த்தால், தேனிசைத்தென்றல் தேவாவாக இருக்கும். கண்ணதாசன் பாடலை வாலி என்றும் வாலி பாட்டுக்களை கண்ணதாசன் என்றும் குழம்பிக்குழம்பி காதலித்தது போல், தேனிசையாக செவியில் இறங்கிய தேவாவின் பாடல்கள் பட்டையைக் கிளப்பின; பட்டிதொட்டியெங்கும் பரவின!
கிராமத்து வாழ்க்கை, ஆத்தங்கரையோரம், வாய்க்கால்வரப்பு என்பதான வாழ்க்கையாக இல்லாமல், நகரத்து வாழ்க்கைதான் தேவாவின் அனுபவம். ஆனால், கண்டுகேட்டு உண்டு உயிர்த்து என்பதுபோல், கிராமத்து இசைகளை மிக அழகாகவும் தெளிவாகவும் தந்ததில் தேவா தனித்துத் தெரிந்தார். ‘மனசுக்கேத்த மகராசா’ என்று இசைஞானியை எல்லோரும் ஆராதித்த அதேகாலகட்டத்தில்தான் ராமராஜனின் ‘மனசுக்கேத்த மகராசா’வில் அறிமுகமானார். ஆனால் ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் பிரசாந்துக்கு இவர் போட்ட அத்தனைப் பாடல்களும் இளசுகளை குத்தாட்டம் போடவைத்தது. ‘யாரோ தேவாவாம்பா’ என்று ஆரம்பத்தில் அறியப்பட்ட தேவா, பிறகு தேனிசை கொடுத்தார். தென்றலென இசை தந்து காற்றுக்கு இதம் தந்தார். தேனிசைத் தென்றல் என்றே கொண்டாடப்பட்டார்.
வாராவாரம் வெள்ளிக்கிழமை அன்று இளையராஜா இசையமைத்த படம் வந்துவிடும். அதேபோலான மிகப்பெரிய உழைப்பும் அசாத்தியமும் தேவாவிடம் இருந்தது. வெள்ளிக்கிழமை தவறாமல் தேவாவின் இசையில் படம் வரும்; பாடல்கள் அறிமுகமாகும். கேசட்டுக் கடைகளில் இவரின் பாடல்களுக்கு தனிவரிசைகள் வைத்த காலமாக அப்போது இருந்தது. தேவாவின் கிராமத்துப் பாடல்கள், தேவாவின் தெம்மாங்குப் பாடல்கள் என்றெல்லாம் வந்த அதேகாலகட்டத்தில் கானா பாடல்கள் தேவாவை இன்னும் கொண்டாடக்கூடிய இசையமைப்பாளராக்கியது.
கானா என்றால் சென்னைக்காரர்களின் இசை, மெட்ராஸ்காரர்களின் பாட்டு என்பதைக் கடந்து கன்யாகுமரிக்கும் காரைக்குடிக்குமாக எல்லாத் திசைகளிலும் கானாவை, கொண்டுசேர்ந்த எளிமையான பாட்டுக்காரர். ரஜினி மீது கொண்ட அதீத விருப்பத்தால், ரஜினி ரசிகனைப் போலவே, ஹேர் ஸ்டைல், வெள்ளை ஜிப்பா குர்தா, வெள்ளைவெளேர் செருப்பு என தன் இசை அடையாளங்களுடன் இதையும் இணைத்துக்கொண்டார்.
அஜித்தின் முதல் ஹிட் படமான ‘ஆசை’ திரைப்படத்துக்கான இசை, தேவாவை இன்னொரு ஸ்டைல் காட்டி ரசிகர்களை ஈர்த்தது. மிக மிகக் கவனமாக தேவாவிடம் இப்படியான இசையைக் கொடுங்க சார் என்று இயக்குநர் வஸந்த் ஆசை ஆசையாகக் கேட்டு வாங்கினார். வழக்கமான தேவா இசையாக இல்லாமல், தேவாமிர்த இசையாகவே ‘ஆசை’ படத்தின் ‘கொஞ்சநாள் பொறு தலைவா’வும் ‘புல்வெளிப்புல்வெளி’யும் என போட்ட பாட்டுகள் எல்லாமே புது தினுசு.
அதேபோலத்தான் ‘நேருக்கு நேர்’ படத்தின் ஆல்பம், தேவாவுக்கு மிகப்பெரிய ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்தது. ‘மனம் விரும்புதே உன்னை’ பாடலை திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள் ரசிகர்கள். ‘எட்டுப்பட்டி ராசா’வில் ‘பஞ்சுமுட்டாய் சீலைக்காரி’ பாடல் எட்டுப்பட்டிக்கும் இசையில் இளையராஜா என்றாலும் தேவாவையும் இளவரசராக்கியது. தேவாவுக்கென ரசிகர்கள் கூட்டமும் உருவானது.
ஒருகட்டத்தில், இளையராஜா கால்ஷீட் கிடைக்காதவர்களும் ஏ ஆர் ரஹ்மான் காஸ்ட்லி என யோசித்தவர்களும் தேவாவின் ஆர்மோனியத்தையே நம்பினார்கள். ‘மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு’, ‘உதயம் தியேட்டரிலேஎ’, ‘நலம் நலமறிய ஆவல்’, ‘ஒருமணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்’, ‘காதலா காதலா காதலில் தவிக்கிறேன்’, ‘வைராஜா வை உன் சேவையெல்லாம் செய்’, ‘வந்தேண்டா பால்காரன்’, ‘நான் ஆட்டோக்காரன்’ என்று தேவா கொடுத்ததெல்லாம் ஹிட்டுமொட்டுகளென தெறித்துவிழுந்தன.
கமல், ரஜினி, முரளி, விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ், அஜித், விஜய் என முதன்மையான நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் அந்தந்த ரசிகர்களின் டேஸ்ட் தப்பாமல், இசையைப் பரிமாறிய வித்தகர் என்று திரையுலகம் கொண்டாடியது. ஆனால் எல்லா வெற்றிகளையும் எந்த ஆர்ப்பாட்டமோ தலைக்கனமோ இல்லாமல் சாதித்தார்.
’அவள் வருவாளா’ பாடலைக் கேட்டும் ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘கட்டிப்புடிடா கட்டிப்புடிடா’ ‘திலோத்தமா’, ‘டயானா டயானா’ என பாடல்களையெல்லாம் கேட்டு கிராமத்து பேருந்துகளுக்கு இன்னும் கொண்டாட்டம் கூடியது. தேவாவையும் தேவாவின் பாடல்களையும் அப்படியே அணைத்துப் பதித்துக்கொண்டாடினார்கள். இன்றைக்கும் தேவாவின் ஏகப்பட்ட பாடல்களை, தெற்கத்திப் பக்க கிராமங்களை நோக்கிப் பறக்கும் பேருந்துகளில், தேவாவின் தேவாமிர்தப் பாடல்களைக் கேட்கலாம்!
எல்லாவற்றையும் விட, தேவாவின் மிகப்பெரிய சாதனை... அது தமிழ் சினிமாவுக்கான சாதனையாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்த் திரையுலகில் எந்த நடிகருக்கும் டைட்டிலின் போது அவருக்கென தனியிசை இருந்ததில்லை. ‘அண்ணாமலை’ படத்துக்கு கவிதாலாயவுக்காக இசையமைக்கும்போது, இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா, ரஜினியின் பெயர் டைட்டிலில் இடம்பெறும்போது ரஜினிக்கு தனி இசை வழங்கும்படி கேட்டார். தேவாவும் போட்டுக்கொடுத்தார். S... U...P...E...R... S...T...A...R... R.. A...J...N...I... என்று ஒவ்வொரு எழுத்தாக வரும்போது ஒரு இசையை தேவா கொடுக்க, லேட்டஸ்டாக வந்த ‘ஜெயிலர் 2’ வரை ரசிகர்களுக்கு ‘கூஸ்பம்ப்ஸ்’ கொடுக்கிற இசையை, தேவா செய்ததும் ரஜினிக்கு வழங்கியதும் எந்த இசையமைப்பாளரும் செய்யாத சாதனைச் சரித்திரம்; சரித்திர சாதனை!
இசையமைப்பாளர்கள் தோன்றலாம்; மறையலாம். ஆனால் செவிகளுடன் மனிதப்பிறப்பு நிகழும்வரை, கலைஞர்களுக்கு மரணமில்லாப் பெருவாழ்வுடன் இருந்துகொண்டே இருப்பார்கள்.தேவாவும் தேவ இசையும் காலங்கள் கடந்தும் ஒலித்துக்கொண்டே இருக்கும். வாய்க்கால்வரப்புகளுக்கும் தோப்புகளுக்கும் குளங்களுக்கும் நடுவே பேருந்துகளில் பயணிக்கிறவர்களுக்கும் இன்றைக்கும் புதுசாக வந்திருக்கிற மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் தேவாவின் தேனிசை இளைப்பாறல் தந்துகொண்டேதான் இருக்கும்!