இளையராஜாவின் பேரனும், இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் மகனுமான யத்தீஷ்வர் ராஜா தான் இசையமைத்து, எழுதி பாடிய முதல் பக்தி இசை தொகுப்பை, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ரமண மகரிஷி ஆசிரமத்தில் இன்று வெளியிட்டுள்ளார். 6 நிமிடங்கள் கொண்ட இந்த பக்திப் பாடலை திருவண்ணாமலையில் ரமணாசிரம நிர்வாகி வெளியிட, கார்த்திக் ராஜா பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்த 'நமசிவாயம்..' என்று ஆரம்பிக்கக்கூடிய அந்தப் பக்தி பாடலை ரமண ஆஸ்ரமத்தில் ஒலிக்க செய்து, யத்திஷ்வர் ராஜாவை பாராட்டி சால்வை அணிவித்து ரமணரின் புகைப்படத்தை வழங்கி கௌரவித்தனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய யத்தீஸ்வர் ராஜா, "எனக்கு பக்தி பாடல் பாட வேண்டும் என்ற ஆசையில் முதல் பாடலை அண்ணாமலையார் குறித்து பாடினேன். இது எனக்கு மிகுந்த பெருமையாக உள்ளது. இதற்காக தாத்தா (இளையராஜா) பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். தந்தையின் உதவியோடு இரண்டு நாட்களில் பாடல் உருவாக்க பணிகள் அனைத்தும் நிறைவு செய்தேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சினிமாவில் பணிபுரிய எனக்கு ஆசை உள்ளது. சரியான வாய்ப்பு கிடைத்தால் அதனை முறையாக பயன்படுத்திக் கொள்வேன். வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
இளையராஜா குடும்பத்தில் அவரது சகோதரர் கங்கை அமரன், மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இசையமைப்பாளர்களாக அறிமுகம் ஆகியுள்ளார். அந்த வரிசையில் குடும்பத்தின் அடுத்த இசை வாரிசாக உருவெடுத்திருக்கும் யத்தீஸ்வர் ராஜாக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.