சினிமா

த்ரில்லர் கதைக்களத்தோடு மே 30-ல் வெளியாகும் “மனிதர்கள்” திரைப்படம்!

By VASUKI
26 May 2025, 09:39 PM
திரில்லர் கதைக்களத்தில் உருவான மனிதர்கள் திரைப்படம் மே 30 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மனிதர்கள்” திரைப்படம், வரும் மே 30 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர், திரை ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, திரைப் படைப்பாளிகள் மத்தியில் பெரும் பாராட்டுக்களைக் குவித்துள்ளது.

இப்படத்தின் டிரெய்லரைப் பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெகு சுவாரஸ்யமான டிரெய்லர், படத்திற்காக காத்திருக்கிறேன் எனக் கூறியதோடு, தனது சமூக வலைத்தள பக்கத்திலும் படத்தின் டிரெய்லரைப் பகிர்ந்துள்ளார்.

புகழ் மிகு ஒளிப்பதிவாளர் பி சி ஶ்ரீராம் இப்படத்தின் டிரெய்லரால் ஈர்க்கப்பட்டு, உடனடியாக படக்குழுவினரை அழைத்துப் பாராட்டி, அவர்களோடு உரையாடியுள்ளார். அந்நிகழ்வில்.. முதல் சில நொடிகளிலேயே இந்தப்படம் என்னை ஈர்த்துவிட்டது. காட்சியும் களமும் வெகு சுவாரஸ்யமாக உள்ளது. படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு இரவில் ஒன்று சேர்ந்து மது அருந்தும் ஆறு நண்பர்கள், அடுத்த ஆறு மணி நேரத்தில், அவர்களுக்கும் ஏற்படும் ஒரு சிறு பொறி, எப்படி பெரும் பிரச்சனையாக வெடிக்கிறது என்பதை, பரபரப்பான திரைக்கதையில், வித்தியாசமான களத்தில் புதுமையான திரில்லராக, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில், அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இப்படத்தில் அறிமுக நடிகர்கள் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த வெளியீட்டுக்கு முன்னதாகவே மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் மே 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.