சினிமா

’அமரன்’ படத்தை இணையத்தில் வெளியிட தடை… உயர்நீதிமன்றம் அதிரடி!

By sumalekha
29 Oct 2024, 09:34 PM
Amaran Movie Update : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன்  திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Amaran Movie Update : சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிடோர் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள அமரன்  திரைப்படம், உலகெங்கிலும் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியன்று வெளியாக உள்ளது. 

இந்த படத்தை சட்டவிரோதமாக 1957 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில்  வெளியிடப்படுவதை தடுக்க வேண்டுமென அரசு மற்றும் தனியார் இணைய தள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டெர்நேஷனல் நிறுவனத்தின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் அமரன் படம் வெளியாகயுள்ளதாகவும், மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், அதன்மூலம் திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார். 

இதையடுத்து, அமரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்த நீதிபதி, அவ்வாறு வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.