சினிமா

'ரெட்ரோ' படம் ஒரு போரையே எதிர்கொண்டது.. கார்த்திக் சுப்பராஜ்

By Jayakumar
21 Jun 2025, 07:52 PM
'ரெட்ரோ' வெளியான பிறகு, அது கிட்டதட்ட ஒரு போரையே எதிர்கொண்டதாகவும், ரசிகர்கள் கொடுத்த அன்புதான் போரில் ஜெயிக்க வைத்துள்ளது என்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான படம் 'ரெட்ரோ'. இந்த படம் கடந்த மே 1 ஆம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, நாசர், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மேலும், ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா நடனமாடி இருந்தார்.

2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். மேலும், சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை வெளியிட்டது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் உலகளவில் ரூ.234 கோடி வசூல் செய்து கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படம் கடந்த மே 31 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்டது.

சமீபத்தில் 'ரெட்ரோ' படத்தை கூடுதல் காட்சிகளுடன் வெப் தொடராக வெளியிட திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தகவல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 'ரெட்ரோ' திரைப்படம் வெற்றிகரமாக 50வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "தனிப்பட்ட முறையில் எனக்கு இது ஒரு எமோஷ்னலான ரோலர் கோஸ்டர் பயணம். படம் வெளியான பிறகு கிட்டத்தட்ட ஒரு போரையே எதிர்கொண்டது. ஒரு அஜெண்டாவுடன் குறிவைக்கப்பட்ட வெறுப்புகள் இருந்த போதிலும் அதைத் தாண்டி நிறைய அன்பு இருந்தது.

அந்த அன்பு தான் இந்த போரை ஜெயிக்க வைத்தது. நேர்மையான விமர்சனங்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. அதை கருத்தில் எடுத்து கொண்டு எதிர்கால படங்களில் அது பிரதிபலிக்கும் வகையில் பார்த்து கொள்வேன்" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.