நடிகர் கமல்ஹாசனின் 'ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்கும் ரஜினிகாந்தின் 173-ஆவது திரைப்படத்திற்கு 'தர்மன்' (DHARMAN) என்று பெயரிடப்பட்டுள்ளது. 'ஓ மை கடவுளே' மற்றும் 'டிராகன்' படங்களின் மூலம் கவனம்பெற்ற இளம் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
'தி டெட்லி டாக்டர்' (The Deadly Doctor) என்ற அதிரடியான டேக்லைனுடன் வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், தற்போதைய சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி ட்ரெண்டாகி வருகிறது. அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு அன்பறிவ் மாஸ்டர்கள் சண்டைப்பயிற்சி செய்கின்றனர்.
போஸ்டர் டீகோடிங்: என்ன கதையாக இருக்கும்?
வெளியாகியுள்ள போஸ்டரை உற்றுநோக்கும் போது, இது ஒரு சைக்கோ-மெடிக்கல் த்ரில்லர் அல்லது மருத்துவத் துறையில் நடக்கும் ஊழல்களுக்கு எதிரான ஒரு ஆக்ஷன் கதையாக இருக்கலாம் என்று கணிக்க முடிகிறது. போஸ்டரில் ரஜினிகாந்த், ஆபரேஷன் தியேட்டரில் பயன்படுத்தப்படும் நீல நிற அறுவைச் சிகிச்சை உடையில், கைகளில் வெள்ளை நிறக் கையுறைகளை (Surgical Gloves) அணிந்து மிகவும் ஸ்டைலாகவும் மாஸாகவும் காட்சியளிக்கிறார்.
அவரது ஒரு கையில் இரத்தம் தோய்ந்த அறுவைச் சிகிச்சை கத்தி உள்ளது. மேலும் அவரது உடலிலும், காலில் அணிந்திருக்கும் வெள்ளை நிற காலணியிலும், அவருக்கு முன்னால் இருக்கும் உடலிலும் இரத்தம் சிதறிக் கிடக்கிறது. மருத்துவப் பின்னணியில் வழக்கமான அமைதியான மருத்துவராக இல்லாமல், அநியாயங்களை அதிரடியாகத் தட்டிக்கேட்கும் ஒரு 'டெட்லி டாக்டர்' கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ச் காட்டும் '12:12' ரகசியம்: பிறந்தநாள் அன்று ரிலீஸா?
இந்த போஸ்டரில் ரசிகர்களின் கண்களைக் கவர்ந்த மிக முக்கியமான அம்சம், ரஜினிகாந்த் தனது இடது கையில் அணிந்திருக்கும் டிஜிட்டல் கடிகாரம் ஆகும். அந்த வாட்ச் திரையில் சிவப்பு நிறத்தில் '12:12' என்ற நேரம் காட்டப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12-ஆம் தேதி என்பதால், இந்த '12:12' என்பது தற்செயலாக வைக்கப்பட்ட நேரம் அல்ல; அது ஒரு குறியீடு என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
'தர்மன்' திரைப்படம் ரஜினிகாந்தின் பிறந்தநாளான வரும் டிசம்பர் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பதைத் தான் படக்குழு இந்த வாட்ச் மூலம் சூசகமாக அறிவித்துள்ளது என்று சினிமா வட்டாரங்கள் வலுவாக நம்புகின்றன. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நாளை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர்கள் மாற்றம்
முதலில் ரஜினியின் 173 படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த சில நாட்களிலேயே அவர் அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, யார் அடுத்த இயக்குநர் என்று பார்க்கும் பொது 'டான்' பட இயக்குநர் சி.பி.சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டு மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதற்கான டைட்டில் தீம் ம்யூசி தற்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது.
இதையடுத்து, அவரும் அந்த படத்தில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் அஸ்வத் மாரிமுத்து பெயர் அடிபட்டது. அதனைதொடர்ந்து தான் இன்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அஸ்வத் மாரிமுத்துவும் இந்த படத்தில் இருந்து வெளியேறாமல் இருந்தால் சரிதான் என்று ரசிகர்கள் பெருமூச்சு விடுகின்றனர்.
தர்மமே வெல்லும்!#Dharman #Thalaivar173 #SuperstarRajinikanth #KamalHaasan @rajinikanth @ikamalhaasan #Mahendran @Dir_Ashwath @anirudhofficial @anbariv @iYogiBabu @SimranbaggaOffc #RaashiKhanna @nikethbommi #KarthikRajkumar @PradeepERagav @kabilanchelliah @ShruthiManjari… pic.twitter.com/UWjXErKdIE
— Raaj Kamal Films International (@RKFI) June 24, 2026