Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

வசூல் வேட்டையில் 'தேரே இஷ்க் மெய்ன்'.. 13 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

By Christon
11 Dec 2025, 03:41 PM
தனுஷ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படம், உலகளாவிய வசூலில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில், இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் வெளியான இந்தித் திரைப்படமான ‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படம், உலகளாவிய வசூலில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தனுஷின் முந்தைய இந்திப் படங்களான 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' ஆகியவற்றை இயக்கிய ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் இந்தப் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

'தேரே இஷ்க் மெய்ன்’ பாலிவுட் படம் கடந்த நவம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், தற்போது 13 நாட்களில் மொத்தமாக ரூ.152 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படம் இந்தியில் வெளியான முதல் 3 நாட்களில் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்திருக்கிறது. மொத்த உலகளாவிய வசூலும் ரூ.70 கோடியைத் தொட்டிருந்தது.

சமீபத்திய இந்தித் திரையுலக நடிகர்கள் சிலரின் படங்கள் கூட இந்தளவுக்கு வசூல் செய்யாததே இந்த வெற்றிக்குக் காரணம் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷின் நடிப்பிற்கு ரசிகர்களிடமும் நல்ல பாராட்டுகள் கிடைத்து வருகிறது.

வரவேற்பு மற்றும் தமிழ் வெளியீட்டில் தொய்வு

இந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இளைஞர்கள் மத்தியில் இப்படத்தின் இசைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இருப்பினும், தமிழிலும் பலருக்கு இப்படம் பிடித்திருந்தாலும், சரியான புரோமோஷன் இல்லாததால் அதிக திரைகளில் வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.4 கோடிக்கும் குறைவாகவே வசூல் செய்திருக்கிறது. இதைப் பற்றி எல்லாம் படக்குழுவினர் கவலைப்படாமல், இந்தி வசூலை மட்டுமே நம்பி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. தனுஷின் முந்தைய படமான 'இட்லி கடை' திரைப்படம் வணிக ரீதியாகச் சுமாரான வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.