Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

தமிழ்நாடு தூய்மை மிஷன்: யோகி பாபு விழிப்புணர்வு வீடியோ வெளியீடு - ₹25,000 பரிசுடன் ரீல்ஸ் போட்டி அறிவிப்பு!

By VASUKI
27 Sep 2025, 09:24 AM
தமிழ்நாடு தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ், கழிவுகளைப் பிரித்து மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு வீடியோவை நடிகர் யோகி பாபு வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு ₹25,000 பரிசைக் கொண்ட ரீல்ஸ் போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு 2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய "தூய்மை மிஷன்" திட்டம், மாநிலம் முழுவதும் கழிவுகளைச் சீரான முறையில் பராமரிக்கும் ஒரு புதிய முயற்சியாகத் திகழ்கிறது. குப்பைகளில் இருந்து கழிவுகளைப் பிரித்து, அவற்றை மறுசுழற்சி (Recycling), மறுபயன்பாடு (Reuse) மற்றும் சாலையோரங்களில் கழிவு கொட்டுவதைக் குறைப்பது இதன் முக்கிய நோக்கமாகும். இதன்மூலம் சுத்தமான, பசுமையான தமிழ்நாடு எனும் இலக்கை அடைய அரசு இலக்கு வைத்துள்ளது.

திட்டத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடு

இந்தத் திட்டமானது மாநில அளவில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் தலைமையிலான மாநில நிர்வாகக் குழுவால் வழிநடத்தப்படுகிறது. மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட தூய்மை குழுக்களை வழிநடத்துகின்றனர். நேரடி செயல்பாடுகளைத் தொகுதி மற்றும் நகராட்சிகளில் உள்ள தூய்மைக் குழுக்கள் மேற்கொள்கின்றன. கிளீன் தமிழ்நாடு கம்பெனி லிமிட்டெட் நிறுவனம் இந்தத் திட்டத்தின் முக்கிய அமைப்பாகச் செயல்படுகிறது.

திட்டம் செயல்படும் முறை:

கழிவு சேகரிப்பு: அரசு அலுவலகங்களில் உள்ள தேவையற்ற பழைய பொருட்கள், எலக்ட்ரானிக் கழிவுகள் (இ-கழிவுகள்), பயன்படுத்தாத புத்தகங்கள் போன்றவற்றைச் சேகரித்து, உரிமம் பெற்ற மறுசுழற்சி செய்யும் வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.

கண்காணிப்பு: சேகரிக்கப்படும் கழிவின் அளவு மற்றும் அதன் மதிப்பு ஆகியவை நேரடியாகக் கண்காணிக்கப்பட்டுப் பதிவு செய்யப்படுகிறது.

விரிவாக்கம்: அரசு அலுவலகங்களில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், அடுத்த கட்டமாக கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பின்னர் கிராமங்கள், நகரங்கள் என மக்கள் பங்கேற்கும் அளவிற்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. கழிவுகளைப் பிரிப்பதைத் பழக்கப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் எனக் கூறப்படுகிறது.

விழிப்புணர்வு மற்றும் செயல்பாடுகள்

இந்தத் திட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக, பிரபல நடிகர் யோகி பாபு தலைமையில் ஒரு விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் அவர் குழந்தைகளிடம் பேசுவது போல உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், விழிப்புணர்வுக்காகக் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் 30 விநாடிகள் ரீல்ஸ் உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர வேண்டும் என்றும், சிறந்த ரீல்ஸ்க்கு ₹25,000 பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஜூன் 5ஆம் தேதி மாநிலம் முழுவதும் முதன்முறையாக 1,000க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் இந்தச் சேகரிப்பு இயக்கத்தில் பங்கேற்றன. இதுவரை இரண்டு சேகரிப்பு இயக்கங்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. இதன் மூலம் தமிழ்நாடு அரசு கழிவு மேலாண்மை முறைமைக்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.