சினிமா

சினிமா ஸ்ட்ரைக்...புது பட ரிலீஸ்,ஷூட்டிங், போஸ்ட் புரொடக்ஷன் எல்லாம் கட், தயாரிப்பாளர் சங்கம் அதிரடி ஆக்ஷன் !

By Sumalekha
22 Aug 2026, 03:00 PM
செப்டம்பர் 1 முதல் புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்றும், அதேபோல் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துவது என்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவு!....
தமிழ் சினிமாவில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்றும், அதேபோல் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துவது என்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் கூட்டாக அறிவித்துள்ளன.

இந்த அதிரடி முடிவு, தமிழ்நாட்டில் திரைப்படங்களின் OTT வெளியீட்டு கால இடைவெளி தொடர்பாக உருவாகியுள்ள சர்ச்சையின் அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சமீபத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக இரு தயாரிப்பாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 22-ம் தேதி காலை 11 மணியளவில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் நடைபெற்றது.

அதன்படி, செப்டம்பர் 1 முதல் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை 8 வாரங்களுக்குப் பிறகுதான் OTT-யில் வெளியிடுவோம் என தயாரிப்பாளர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தால் மட்டுமே அந்தப் படங்களை திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்க முடியும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதான் தற்போது தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் தரப்புக்கும் இடையே மோதலாக மாறியுள்ளது.

“தயாரிப்பாளர்களிடம் ஆலோசிக்காமல் முடிவு” – எதிர்ப்பு:

இந்த முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பு தயாரிப்பாளர்களிடம் உரிய ஆலோசனை நடத்தப்படவில்லை என தயாரிப்பாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி முடிவெடுக்க வேண்டும். தயாரிப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுக்கப்படும் முடிவுகளை ஏற்க முடியாது என தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த புதிய நடைமுறை?”:

மேலும், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் இதுபோன்ற 8 வார OTT விதிமுறை நடைமுறையில் இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த புதிய நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுபோன்ற மாற்றங்கள் திரைப்படத் துறையின் அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.700 கோடிக்கு மேல் நஷ்டம்?

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 250 திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால், அவற்றில் பெரும்பாலான திரைப்படங்கள் தயாரிப்பாளர்கள் முதலீடு செய்த தொகையில் பாதியைக் கூட வசூலிக்க முடியாத சூழல் இருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதனால், தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.700 கோடிக்கும் அதிகமான பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இவ்வளவு பெரிய இழப்புகளை சந்தித்தாலும் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து திரைப்படத் தொழிலை நடத்தி வருவதாகவும் தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1 முதல் என்ன நடக்கும்?

இந்த பிரச்சனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், செப்டம்பர் 1, 2026 முதல் புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர்கள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

அதுமட்டுமின்றி, புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் உள்ளிட்ட அனைத்து திரைப்படப் பணிகளையும் நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் செப்டம்பர் 1 முதல் தமிழ் சினிமாவின் புதிய திரைப்பட வெளியீடுகள் மட்டுமின்றி, திரைப்படங்களின் தயாரிப்பு பணிகளிலும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

முதலமைச்சரிடம் பிரச்சனையை கொண்டு செல்ல முடிவு

இந்த விவகாரத்தை தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

மேலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும் பிரச்சனையை எடுத்துரைத்து, தமிழ்நாடு அரசின் தலையீட்டின் மூலம் இந்த விவகாரத்திற்கு சுமுகமான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், வரும் செப்டம்பர் 1 முதல் தமிழ் சினிமா துறையில் ஏற்படப்போகும் இந்த முடிவு, திரைப்படங்களின் வெளியீடு மட்டுமின்றி, படப்பிடிப்பு முதல் போஸ்ட் புரொடக்ஷன் வரை ஒட்டுமொத்த திரைத்துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

அடுத்ததாக நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா? அல்லது செப்டம்பர் 1 முதல் தமிழ் சினிமா பணிகள் உண்மையிலேயே முடங்குமா? என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.