நடிகர் சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள 'கருப்பு' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் 'கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, யோகிபாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மே 14-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளை மிகத் தீவிரமாக மேற்கொள்ளப் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி மதுரையில் மிக பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சூர்யாவிற்கு மிக முக்கியமான படம்
சமீபகாலமாக சூர்யா நடிப்பில் வெளியான 'கங்குவா', 'ரெட்ரோ' போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறிய நிலையில், 'கருப்பு' படத்தின் வெற்றி அவருக்கு மிக அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதனால், ரசிகர்களை நேரடியாகச் சந்திக்கும் வகையில் மதுரையைத் தேர்வு செய்துள்ளார் சூர்யா. இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில் "மதுரை ரெடியா?" எனப் பதிவிட்டுள்ளதும், இசையமைப்பாளர் சாய் அப்யங்கரின் தகவல்களும் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.
சாய் அப்யங்கரின் இசை
இப்படத்திற்குப் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான 'God Mode', 'ராத்து ராசன்' உள்ளிட்ட பாடல்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், முழு ஆல்பமும் வரும் 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கப்போகும் முக்கியப் பிரபலம் யார் என்ற எதிர்பார்ப்பும் கோலிவுட்டில் எழுந்துள்ளது. 'கருப்பு' படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் 'விஸ்வநாத் & சன்ஸ்' ஜூலை மாதத்திலும், 'சூர்யா 47' அடுத்தும் வெளியாகத் தயாராகி வருகின்றன.