சினிமா

"லவ்-அ விட இதான் முக்கியம்"GEN-Z க்கு சூர்யா அட்வைஸ்...

By Sumalekha
03 Aug 2026, 02:12 PM
கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து 'விஸ்வநாத் & சன்ஸ்' என்ற நடித்துமுடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில், சூர்யா சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து 'விஸ்வநாத் & சன்ஸ்' என்ற நடித்துமுடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில், சூர்யா சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

இந்த படம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ஆகஸ்ட் 2, கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமார், இயக்குனர் வெங்கி ஆட்லூரி, நாயகி மமிதா மற்றும் படத்தின் முக்கிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்டு பேசிய சூர்யா, " என் செல்லங்களா... கண்ணுங்களா... என் சாமிங்களா... எல்லாம் என் சொந்தகாரங்க... சொந்தங்க.., நீங்க எல்லம்சேர்ந்து ஆடியோ லான்ச் ஃபங்ஷனை ஒரு திருவிழா மாதிரி மாத்திட்டீங்க" என்று ஹரி இயக்கத்தில் அவர் நடித்த படத்தின் வசனங்களை சொல்லி பேச ஆரம்பித்தார்.

மேலும், அவருடைய பிறந்தநாளை கொண்டாடாமல் போனதற்கு அவர் கூறியதாவது " என்னோட பிறந்தநாள ஒரு காரணத்துக்காக நான் கொண்டாடாம போனாலும், நீங்க என் பிறந்தநாள்-ல செஞ்ச எல்லா நல்ல விஷயத்தையும் பார்த்தேன். 5000 பேருக்கு மேல இரத்த தானம் பண்ணிருக்கிங்க. 40,000 பேருக்கு மேல உங்களால பயன் அடைஞ்சுருக்காங்க. குட்டி குட்டி குழந்தைகளைக் கடைக்கு கூட்டிட்டு போய் அவங்களுக்கு துணிகள் வாங்கி கொடுத்துருக்கிங்க. இந்த அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி." என கூறி நெகிழ்ந்தார்.

கருப்பு படத்தின் வெற்றிக்கு நன்றி கூறும் விதமாக அவர் " கருப்பு படத்துக்கு அப்புறம் உங்கள இப்போதான் பாக்குறேன். அந்த படத்த இவ்ளோ பெரிய வெற்றி படமா மாத்துன குட்டீஸ், பெரியவங்க எல்லாருக்கும் கட்டிபுடிச்சு நன்றிய சொல்லிக்கிறேன். கருப்பு படத்தோட 100வது நாள் வரப்போகுது. அதுக்கான விழாவும் வரப்போகுது, அங்க கூடிய விரைவில் நாம மீண்டும் சந்திக்கலாம்" என்று நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல் அப்டேட்டும் தந்துள்ளார்.

இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகை ராதிகா வரமுடியாமல் போனாலும் அவரைபற்றி "ராதிகா அக்கா கூட நிறைய அனுபவங்கள் இருக்கு. என்னோட மொத ரெண்டு, மூன்று படங்களுக்கு, இப்பத்தான் நடிக்க வரார், சூர்யா படம்தான-ன்னு காசு வாங்காம சும்மா நடிச்சு கொடுத்தாங்க. எங்க மேல அவ்ளோ அன்பு வச்சிருக்காங்க.

முக்கியமா, கார்த்தி படிக்கிறதுக்கு வெளிநாட்டுக்கு போகனும். ஆனால் அப்போ வெளிநாடு போக பேங்க்ல ஒரு டெபாசிட் தொகை கட்டணும். அந்த டெபாசிட் பணம் அளவு எங்ககிட்ட அப்போ காசு இல்ல. அந்தநேரத்துல, அப்பாவும், ராதிகா அக்காவும் சீரியல்ல ஒன்னா நடிச்சிட்டு இருந்தாங்க. ராதிகா அக்கா தான் அந்த டெபாசிட் பணத்தை கொடுத்தாங்க.

'கார்த்திக்கு அட்மிஷன் கிடைக்கிற வரைக்கும் இந்த பணம் உங்க பேங்க்ல இருக்கட்டும்'னு உதவி செஞ்சாங்க‌. சொல்ல முடியாத நெறைய நினைவுகள் அவங்களோட எனக்கு இருக்கு" என்று அவருடனான எமோஷனையும் பகிர்ந்துக்கொண்டார்.

இசை வெளியீட்டில் நடிகை மமிதா பைஜூ சூர்யாவுடன் முன்பே ஒரு படம் நடிக்க முடியாமல் போனதாக வருத்தம் தெரிவித்த நிலையில், சூர்யா அவர்களும் "இந்தப் படம் கதை கேட்ட உடனே நாங்க யாரையுமே இந்தக் கதாபாத்திரத்துக்கு யோசிச்சு பார்க்கல. உங்க பேரை தவிர வேறு எந்த பேரும் எங்களுக்கு ஆப்ஷன்லையே இல்ல. 'மமிதா,நம்ம ரெண்டு பேரும் ஒரு முன்னாடியே ஒரு படம் பண்ண வேண்டியதா இருந்தது. ஆனால் அது நடக்கலைன்னு வருத்தம் இருந்துகிட்டே இருந்துச்சு'.

நீங்க இந்தப் படத்துல நடிச்சத பார்த்தேன், நீங்க ஒரு மேஜிக். முக்கியமா இந்த படத்துக்கு நீங்க அழகா டப்பிங் பண்ணிருக்கிங்க , உங்க தமிழ் உச்சரிப்பு அழகா இருந்துச்சு, உங்களுக்கும் ராதிகா அக்காக்கும் இருக்க கெமிஸ்ட்ரி இன்னொரு ஸ்பெஷல் மொமெண்ட்-ஆ இருக்கும்" என்ற வருத்தத்தையும் மகிழ்வையும் பகிர்ந்தார்.

படத்தின் இயக்குனர் பற்றி பேசிய சூர்யா " எனக்கு விஸ்வநாத்&சன்ஸ் இன்னொரு புது அடையாளம். அந்த அடையாளத்தை கொடுத்தது வெங்கி. ரொம்ப நாள் ஆச்சு இந்த மாதிரி படம் பண்ணி... அவரோட எழுத்து மேல எனக்கு பெரிய மரியாதை இருக்கு. இந்தப் படம் உறவுகளை பத்தி அவ்வளவு அழகா பேசும்.

இந்தப் படம் பார்க்கும் போது உங்க உதட்டு ஓரத்துல ஒரு புன்சிரிப்பு படம் முழுசும் இருக்கும். ரொமான்ஸ் பத்தி பேசும், பேமலிஸ் பத்தி பேசும். ஹீரோ எலிவேஷன் குறையவே குறையாது. ஒரு ஹோல்சம் என்டர்டெயின்மென்ட்டாக இந்தப் படம் இருக்கும்" என்று இயக்குனருக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தார்.

இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமார் பற்றி சூர்யா " சின்ன வயசுல மீசை தாடி இல்லாத குழந்தையா இருந்தப்ப ஜிங்கிள்ஸ் பண்ணிட்டு இருந்தாரு. அப்போவே அவ்ளோ டேலண்ட் அவரு, இந்த படத்துக்காக நெறையா உழச்சிருக்காரு, ரொம்ப வருசமா அன்பான தம்பியா இருக்காரு, லவ் யு ஜீவி." என்று அவருடனான அன்பையும் நன்றியையும் கூறினார்.

பிறகு ரசிகர்களிடம்," தினம் தினம் லவ் பண்ணணும். 20 வருஷம் ஆனாலும் லவ் பண்ணணும். அவங்களுக்கு மரியாதை கொடுத்துட்டே இருக்கனும். நம்மளும் மாறுவோம் அவங்களும் மாறுவாங்க.

20 வயசுல இருக்கிறது வேற, 25 வயசுல இருக்கிறது வேற...பல விஷயங்கள் வாழ்க்கைல மாறிட்டே இருக்கும். அன்பும் அவங்க மேல இருக்க காதலும் என்னைக்கும் மாறவே கூடாது.

எவ்ளோ பெரிய விஷயமானாலும் "நம்பிக்கைய மட்டும் விட்றாதீங்க" என்னைய இங்க நிக்கவச்ச உங்களுக்கு என்னவிட பலமடங்கு நன்மையையும், நல்லதும் உங்களுக்கு வந்து சேரணும்னு நான் ஆண்டவன்ட வேண்டிக்கிறேன்." என்று ரசிகர்களுக்கு நன்றியும், உத்வேகமும் அளித்தார்.