Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

'சைலோரே'.. ‘காதி’ படத்தின் முதல் பாடல் தமிழில் வெளியீடு..!

By Christon
24 Jun 2025, 01:22 PM
அனுஷ்கா ஷெட்டி, விக்ரம் பிரபு ஆகியோர் நடித்துள்ள ‘காதி’ திரைப்படத்தின் முதல் பாடல் தமிழில் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. ‘அருந்ததி’ என்ற பேய் படத்தின் மூலம் பிரபலமான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்த வரவேற்பை பெற்றார்.

பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த அனுஷாவுக்கு, ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு சரியான படம் அமையவில்லை. மேலும் அவருக்கு வயது 40-ஐ கடந்துவிட்டதால் படவாய்ப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், அனுஷ்கா தற்போது ‘காதி’ என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார். இது இவரது 50-வது படமாகும். இந்த படத்தில், நடிகர் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ள இந்த படத்தை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜாகர்லமுடி இணைந்து தயாரித்துள்ளனர்.

ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்துக்கு நாகவெல்லி வித்யா சாகர் இசையமைத்துள்ளார். தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் முதல் பாடல் தமிழில் வெளியாகியுள்ளது. 'சைலோரே' எனத்தொடங்கும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. லிப்சிகா பாஷ்யம் மற்றும் நாகவெல்லி வித்யா சாகர் பாடியுள்ள இந்த பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளார். இந்த பாடலின் தெலுங்கு வெர்ஷன் கடந்த 21 ஆம் தேதி வெளியாகி இணையத்தில் வைரலானது.