சினிமா

உடல்நலக்குறைவால் நடிகர் ராஜேஷ் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்!

By MUTHUKRISHNAN
29 May 2025, 10:36 AM
நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவு காரணமாக (மே 29, 2025) இன்று காலமானார். தனது 75 வயதில், 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் கோலோச்சிய ஒரு முக்கிய கலைஞரைத் தமிழ் சினிமா இழந்துள்ளது.
நடிகர் ராஜேஷ், தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் 49 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகர்.வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குறைந்தப்போதிலும், சின்னத்திரையில் அசத்தி வந்தார்.

முகவரி கொடுத்த அவள் ஒரு தொடர்கதை:

மறைந்த நடிகர் ராஜேஷ், டிசம்பர் 20, 1949 அன்று தமிழ்நாட்டின் மன்னார்குடியில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ராஜேஷ் வில்லியம்ஸ். 1974 ஆம் ஆண்டு கே. பாலசந்தர் இயக்கிய "அவள் ஒரு தொடர்கதை" திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

நாயகனாகப் பயணம்:

1979 ஆம் ஆண்டு இராஜ்கண்ணு தயாரிப்பில் வெளியான "கன்னிப்பருவத்திலே" திரைப்படத்தின் வாயிலாக கதையின் நாயகனாக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். அதைத் தொடர்ந்து, கே.பாலசந்தரின் "அச்சமில்லை அச்சமில்லை" (1984) போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். ஒரு காலகட்டத்தில் முன்னணி நாயகர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.
காலப்போக்கில், ராஜேஷ் குணச்சித்திர வேடங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். கமல்ஹாசனுடன் "சத்யா", "மகாநதி", "விருமாண்டி" போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். ரஜினிகாந்த், அஜித், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

திரைப்படங்களில் மட்டுமல்லாமல், தொலைக்காட்சித் தொடர்களில் சீரியலிலும் நடித்துள்ளார். கார்த்திகை தீபம், கானா காணும் காலங்கள் போன்ற சீரியல் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. மேலும், இவர் ஒரு டப்பிங் கலைஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். பல ஆயிரக்கணக்கான நூல்களை வாசிக்கும் பழக்கமுள்ள ராஜேஷ், தத்துவம், கம்யூனிசம், நாத்திகம், ஆன்மிகம், ஜோதிடம் எனப் பல துறைகளிலும் ஆழ்ந்த அறிவைக் கொண்டவர். திரைத்துறையினை தாண்டி, நடிகர் ராஜேஷ் உணவகம் நடத்துதல், ரியல் எஸ்டேட் வணிகத்திலும் ஈடுபட்டு இருந்தார். சென்னையில் முக்கிய பில்டர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

இவரது நடிப்பில் கவனத்தை பெற்ற படங்கள்:

கன்னிப்பருவத்திலே (1979), அச்சமில்லை அச்சமில்லை (1984), அந்த 7 நாட்கள் (1981), சத்யா (1988), மகாநதி (1994), இருவர் (1997), ரமணா (2002), பிதாமகன் (2003), ஆட்டோகிராப் (2004), விருமாண்டி (2004), தர்மதுரை (2016), சர்கார் (2018), மாஸ்டர் (2021), யானை (2022), ருத்ரன் (2023)

வெள்ளித்திரை, சின்னத்திரை, நேர்க்காணல் என தொடர்ச்சியாக சினிமா துறை சார்ந்து அசத்தி வந்த ராஜேஷ் குமார் தனது 75-வது வயதில், உடல்நலக்குறைவால் மறைந்துள்ள செய்தி திரையுலக பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.