சினிமா

ரவி மோகன் - ஆர்த்தி விவகாரம்: கெனிஷா வெளியிட்ட உருக்கமான வீடியோ!

By Christon
15 May 2026, 11:51 AM
நடிகை ரவி மோகனின் தோழி கெனிஷா பிரான்சிஸ் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து விவகாரம் சட்ட ரீதியாகச் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதில் தொடர்புபடுத்திப் பேசப்படும் கெனிஷா பிரான்சிஸ் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ விளக்கம் சமூக வலைதளங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்து, விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், ரவி மோகனின் தோழியான கெனிஷா பிரான்சிஸ், ஆர்த்தி குறித்து அவதூறு பரப்பக் கூடாது என நீதிமன்றம் அண்மையில் தடை விதித்திருந்தது. இந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் கெனிஷா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

துயரங்கள் நிறைந்த கடந்த காலம்

அந்த வீடியோவில் தனது தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டங்களைப் பகிர்ந்துள்ள கெனிஷா, "என்னை விமர்சிப்பதற்கு முன் நான் கடந்து வந்த பாதையைத் தெரிந்து கொள்ளுங்கள். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்ததுடன், உறவினர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளானேன். திருமண வாழ்க்கையில் நேர்ந்த குடும்ப வன்முறையால் என் கருவில் இருந்த குழந்தையையும் இழந்தவள் நான். அம்மா, அப்பா, குழந்தை என அனைத்தையும் இழந்த நான், ஒருவரது குடும்பத்தைக் கெடுக்க நினைப்பேனா?" என்று உருக்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

"ரவி மோகன் குழந்தை இல்லை"

தொடர்ந்து பேசிய அவர், ரவி மோகன் தனது வாழ்க்கைப் முடிவுகளைத் தாமாகவே எடுக்கக்கூடியவர். அவர் குழந்தை இல்லை என்றும், இதில் தேவையற்ற முறையில் தன்னை இழுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். சமூகத்தில் மக்களின் உண்மையான பிரச்சினைகள் ஏராளமாக இருப்பதாகவும், அவற்றைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டுத் தனது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அந்த வீடியோவில் வலியுறுத்தியுள்ளார்.