Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

'டாடி ரொம்ப பாவம்..' பறந்து போ படத்தின் பாடல் வெளியீடு

By Jayakumar
16 Jun 2025, 08:07 PM
இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'பறந்து போ' படத்தின் 'டாடி ரொம்ப பாவம்..' என்ற பாடல் வெளியாகியுள்ளது.

'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'பேரன்பு', 'தரமணி' உள்ளிட்ட வெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர் இயக்குநர் ராம். இவரது இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி 'ஏழு கடல், ஏழு மலை' படம் உருவாகியுள்ளது. இந்த படம், ரோட்டர்டாம் மற்றும் ரஷ்யாவின் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றது.

இதனைத்தொடர்ந்து, இயக்குநர் ராம் தற்போது 'பறந்து போ' என்ற படத்தை இயக்கியுள்ளார். பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்து இந்த படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான 'சன்ஃப்ளவர்..'சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் 2வது பாடல் இன்று வெளியாகியுள்ளது. 'டாடி ரொம்ப பாவம்..' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சித்தார்த் பாடியுள்ள இந்த பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பின் இயக்குநர் ராமின் 'பறந்து போ' படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், மிர்ச்சி சிவாவுக்கு இந்த படம் கேரியர் பெஸ்ட்டாக அமையும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மிர்ச்சி சிவா நடிப்பில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியான 'சுமோ' திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் 'பறந்து போ' படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.