சினிமா

Once More: மீண்டும் 'ரீ-ரிலீஸ்' ஆகும் 'கில்லி' திரைப்படம்!

By Christon
16 Feb 2026, 05:19 PM
நடிகர் விஜய்யின் 'கில்லி' திரைப்படம் மீண்டும் மறுவெளியீடாகிறது
தமிழ் திரையுலகில் தற்போது பழைய பிளாக்பஸ்டர் படங்களை மீண்டும் வெளியிடும் 'ரீ-ரிலீஸ்' கலாச்சாரம் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த 2024-ஆம் ஆண்டு 'ரீ-ரிலீஸ்' ஆன போதே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 'கில்லி' திரைப்படம், தற்போது மீண்டும் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது.

ரூ.50 கோடி வசூல்

இயக்குநர் தரணி இயக்கத்தில், விஜய் - திரிஷா - பிரகாஷ் ராஜ் கூட்டணியில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான 'கில்லி', அந்த ஆண்டின் சிறந்த படமாகத் திகழ்ந்தது. படத்தின் 20-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக கடந்த 2024 ஏப்ரல் மாதம் இப்படம் 4K தரத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டது. எதிர்பாராத விதமாக, அந்த மறுவெளியீட்டில் மட்டுமே இப்படம் உலகளவில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்தது.

பிப்ரவரி 20-ல் மறுவெளியீடு

இந்த நிலையில், விஜய்யின் 'ஜன நாயகன்' போன்ற படங்களின் வருகைக்காக ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில், திரையரங்குகளுக்கு மக்களை ஈர்க்கும் நோக்கில் 'கில்லி' மீண்டும் களம் இறக்கப்படுகிறது. அதன்படி, வருகிற பிப்ரவரி 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இப்படம் மீண்டும் திரையிடப்பட உள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்

ஒவ்வொரு முறை வெளியாகும் போதும் புதிய படம் போலவே ரசிகர்களால் கொண்டாடப்படும் 'கில்லி'க்கு, இந்த முறையும் முன்பதிவு அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'அப்புடி போடு', 'அர்ஜூனர் வில்லு' போன்ற பாடல்களுக்காகவும், முத்துப்பாண்டி - வேலு இடையிலான அதிரடி மோதலுக்காகவும் ரசிகர்கள் மீண்டும் திரையரங்குகளில் ஆட்டம் போடத் தயாராகி வருகின்றனர்.