தமிழக முதல்வர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்ததுடன், படம் முழுவதும் தனது குரலால் ரசிகர்களைக் கட்டிப் போட்டுள்ளார், நிழல்கள் ரவி. அவருடனான ஒரு சுவாரஸ்யமான உரையாடல்...
'ஜனநாயகன்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படி அமைந்தது?
'இந்தப் படத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை நான்தான் பண்ணவேண்டும் என்பதில் வினோத் சார் மிகவும் உறுதியாக இருந்தார். படப்பிடிப்பின்போது அவர் கதையை முழுவதுமாகச் சொல்லாவிட்டாலும், ஒவ்வொரு காட்சியின்போதும் எனக்குத் தேவையான மாடுலேஷன்களைக் காதுகளில் வந்து சொல்லுவார். அதை வைத்து எனது அனுபவத்தால் குரலில் சில மாற்றங்களைச் செய்து நடித்தேன்."
திரையில் 'CM விஜய்' என்ற டைட்டில் கார்டைப் பார்த்தபோது உங்கள் உணர்வு எப்படி இருந்தது?
"அது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். எம்.ஜி.ஆரும் இதுபோல்தான்! அவர் முதல்வரான பிறகுதான் கடைசிப் படமான 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வெளியானது. அப்படித்தான் 'ஜனநாயக'னும் வெளியாகியிருக்கிறது. திரையில் CM.விஜய்' என்று டைட்டிலில் பார்க்கும்போது மக்களிடையே மிகப்பெரிய சந்தோஷம் தெரிந்தது. அதைப் பார்த்து எனக்கே கண்களில் கண்ணீர் வந்துவிட்டது."
விஜய் சாருடன் பல படங்களில் நடித்திருக்கிறீர்கள். அவருக்கும் உங்களுக்குமான அந்த உறவு பற்றி?
'ஆமாம், 'நெஞ்சினிலே', 'காவலன்', 'ஷாஜகான்', 'குஷி', போன்ற பல படங் களில் நான் அவருக்கு அப்பாவாக நடித் துள்ளேன். ஆரம்பக் காலத்தில் SAC இயக்கத்தில் 'இது எங்கள் நீதி என்ற படத்தில் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அவருடன் நான், ராதிகா, ராம்கி உள்ளிட்டோர் நடித்திருந்தோம். நிஜ வாழ்க்கையிலும் எங்களுக்கிடையேயான உறவு அப்பா - மகன் போன்றதுதான்"
ஆரம்பகால விஜய் - அரசியல்வாதி அரசியல்வாதி விஜய்... இந்த மாற்றத்தைப் பார்க்கும் போது எப்படி இருக்கிறது?
"ஷூட்டிங் ஸ்பாட்டில் மிகவும் அமைதியாக இருப்பார். ஆனால், மேடையில் பேசும்போது ஒருவிதமான ஃபோர்ஸ் மற்றும் தன்னம்பிக்கை தெரிகிறது. லட்சத்தில் ஒருவருக்குத்தான் இப்படிப்பட்ட வளர்ச்சி அமையும்"
ஷூட்டிங்கில் விஜய்யிடம் நீங்கள் வியந்த விஷயம் எது?
"அவரது கடின உழைப்புதான். நடனக் காட்சிகளில் எவ்வளவு கடினமான ஸ்டெப்கள் கொடுத்தாலும் ரிகர்சல் பார்க்காமலேயே அசத்தலாக ஆடிவிடுவார். எப்போதும் 'வெல் பிரிப்பேர்டாக இருப்பார்"
சமீபகாலமாக, உங்கள் காமெடிக் கதாபாத்திரங்களும் பேசப்படுகிறதே..?
"ஆமாம், சந்தானத்துடன் 'வடக்குப்பட்டி ராமசாமி', 'டிடி நெக்ஸ்ட் லெவல்' போன்ற படங்களில் நடித்தது நல்ல அனுபவம். மற்ற வேடங்களைவிடக் காமெடி செய்வதுதான் மிகவும் கடினம். சந்தானம் போன்ற ஜாம்பவான்களுடன் நடிக்கும்போது அவர்களின் டைமிங்கிற்கு ஏற்றவாறு நாம் ஈடுகொடுக்க வேண்டும்"
திரையுலகில் உங்களின் நீண்டகாலப் பயணம் பற்றி?
"இறைவனின் அருளால் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக சினிமாவில் இருக்கிறேன். பாரதிராஜா, பாலசந்தர் காலம் முதல் இன்றைய வினோத் காலம் வரை பல மாற்றங்களைப் பார்த்துவிட்டேன். முன்பு ஃபிலிம் ரோல்கள் இருந்தன. இப்போது சிப் (Chip) வந்துவிட்டது. டெக்னாலஜி மாறினாலும், நடிப்பு என்பது ஒன்றுதான்"
விஜய் ரசிகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
“விஜய் சார் முதல்வராகப் பிரமாதமாகச் செயல்பட்டு வருகிறார். இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். காத்திருங்கள். சினிமாத் துறைக்கும் இது ஒரு பொற்காலமாக இருக்கும்!"
விரிவானப் பேட்டி குமுதம் டிஜிட்டலில்...
Link: https://youtu.be/anOH8GCfMiw?si=bwz2XT7o7neZD01n