Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

ஒரே படம்.. 6 இசையமைப்பாளர்கள்.. கவனம் ஈர்க்கும் அதர்வாவின் DNA

By MUTHUKRISHNAN
12 Jun 2025, 10:22 AM
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற படங்கள் மூலம் திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா ஹீரோவாக நடிக்கும் ’டி.என்.ஏ' ( DNA) திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. பாடல்கள், பின்னணி இசையென மொத்தமாக 6 இசையமைப்பாளர்கள் இப்படத்தில் பணியாற்றியுள்ளார்கள்.
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும்' டி என் ஏ' ( DNA) திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

வருகிற ஜூன் மாதம் 21 ஆம் தேதி முதல் உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ள ' டி என் ஏ' ( DNA) திரைப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா, சுப்பிரமணியம் சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

5 புதிய இசையமைப்பாளர்கள் அறிமுகம்:

பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தில் இசைக்காக மட்டும் 6 பேர் பணியாற்றியுள்ளார்கள். ஸ்ரீ காந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீண் சைவி, சத்ய பிரகாஷ், அனல் ஆகாஷ் ஆகியோர் பாடல்களுக்கும், ஜிப்ரான் வைபோதா படத்திற்கு பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்கள். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் அம்பேத்குமார் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில்,படக்குழுவினருடன் இயக்குநர்கள் மாரி செல்வராஜ், ராஜூ முருகன், கணேஷ் கே. பாபு, ஹேமந்த் ஆகியோருடன் கவிஞர் வெண்ணிலாவின் வாரிசுகளும், மத்திய தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் தமிழக அளவில் சாதனை படைத்த கவின்மொழி மற்றும் நிலா பாரதியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இப்படத்தில் பின்னணி இசையமைத்துள்ள ஜிப்ரான் பேசுகையில், ''இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படத்தின் பின்னணி இசைக்காக இயக்குநர் நெல்சன் என்னை தொடர்பு கொண்ட போது அவரிடம் நான் உங்கள் மிகப் பெரிய ரசிகன் என்று சொன்னேன். அவருடைய படங்களில் கதை சொல்லலில் ஒரு நேர்த்தி இருக்கும். என்னைப் பொறுத்தவரை அவர் இயக்கிய மூன்று படங்களை விட இந்த டி என் ஏ சிறந்தது என்று சொல்வேன்” என்றார்.

தயாரிப்பாளருக்கு புகழாரம்:

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசுகையில், '' இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமார் சிறந்த மனிதர் என்று சொல்வதை விட சிறந்த மக்கள் பிரதிநிதி என்று தான் சொல்ல வேண்டும். தினமும் சென்னையிலிருந்து அவருடைய தொகுதியான வந்தவாசிக்கு சென்று மக்களை சந்தித்து விட்டு அதன் பிறகு தான் சென்னை திரும்புவார். அவரை நான் சில முறை வந்தவாசிக்கு சென்று சந்தித்திருக்கிறேன்.‌ தொகுதியுடன் நெருக்கமாக இருக்கும் மக்கள் பிரதிநிதியை சந்தித்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

படத்தின் கதையை நான் அவரிடம் சொன்ன பிறகு, அவர்தான் எல்லோரிடமும் சொன்னார். அந்த வகையில் இந்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அளித்ததற்காக அவருக்கு நன்றி. 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்க' என்ற படத்திற்காக ஏற்கனவே ஐந்து இசையமைப்பாளர் பாடல்களுக்காக பணியாற்றி இருக்கிறார்கள். இந்த படத்தில் ஐந்து இசையமைப்பாளர்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். ஐந்து பேரிடமும் பணியாற்றும்போது ஐந்து வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.

இந்தப் படத்திற்கு வலிமையாகவும் உறுதியாகவும் ஒரு பின்னணி இசை தேவைப்பட்டது. அதற்காக ஜிப்ரானினை தொடர்பு கொண்டோம். அவருடைய எல்லா பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியதற்காக அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

அதர்வாவின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகியுள்ள ' டி என் ஏ' ( DNA) திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.