Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

Vairamuthu: ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்.. வைரமுத்து ஆதங்கம்

By Jayakumar
09 Jun 2025, 12:50 PM
தன்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் படத்தலைப்புகளாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டு தலைப்புகள் வைப்பது அவர்களின் நாகரிகம் ஆகாதா? என்றும் கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் காப்புரிமை என்ற வார்த்தை அதிகமாக விவாதிக்கப்படுகிறது. ஏனெனில், இசையமைப்பாளர்கள் தாங்கள் இசையமைத்த பாடல்களை மற்ற படங்களில் அனுமதி இன்றி பயன்படுத்தினால் நோட்டீஸ் அனுப்புகின்றனர். அதேபோல், தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரித்த படத்தின் காட்சிகள் வேறு படத்தில் பயன்படுத்தினால் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்புகின்றனர்.

உதாரணமாக, அஜித் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்தில் தனது அனுமதி இல்லாமல் தான் இசையமைத்த சில பாடல்கள் பயன்படுத்தியதாக இளையராஜா ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். முன்னதாக 'மஞ்சுமல் பாய்ஸ்' படத்தில் 'கண்மணி அன்போடு காதலன்..' பாடலை பயன்படுத்தியதற்காக ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை கொண்டு உருவான ஆவணப்படத்தில், தனுஷ் தயாரிப்பில் உருவான 'நானும் ரவுடிதான்' படத்தின் ஒரு காட்சியை பயன்படுத்தியதற்காக நோட்டீஸ் அனுப்பினார்.

தற்போது அந்த வரிசையில் கவிஞர் வைரமுத்து இணைந்துள்ளார். தன்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் தலைப்புகள் வைப்பது அவர்களின் நாகரிகம் ஆகாதா? என்றும் கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவின் விவரங்கள் பின்வருமாறு, "என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது. அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை.

ஒன்றா இரண்டா... பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுகிட்டேன், பனிவிழும் மலர்வனம், வெள்ளைப் புறா ஒன்று, பூவே பூச்சூட வா, ஈரமான ரோஜாவே, நிலாவத்தான் கையில புடிச்சேன், மெளன ராகம், மின்சாரக் கண்ணா, கண்ணாளனே, என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கேட்டுப் பார், தென்மேற்குப் பருவக்காற்று, விண்ணைத் தாண்டி வருவாயா, நீ தானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்கமகன் இப்படி இன்னும் பல.

சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை, காணும் இடங்களில் கேட்டதுமில்லை. செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன்.

ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது. ஆனால் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.