Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

கைவிடப்படும் 'மார்கோ-2'.. ரசிகர்கள் ஏமாற்றம்

By Jayakumar
15 Jun 2025, 11:50 AM
எதிர்மறையான கருத்துக்கள் அதிகம் வருவதால் 'மார்கோ' படத்தின் 2 ஆம் பாகத்தை கைவிடுவதாக நடிகர் உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார்.
நடிகர் உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்கிறார். மலையாளம் மட்டும் அல்லாமல் தமிழ் திரையுலகிலும் அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தியுள்ளார். இவர் தமிழில் 'சீடன்' மற்றும் 'கருடன்' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இயக்குநர் ஹனீப் அடேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் கடந்தாண்டு டிசம்பர் 20 ஆம் தேதி வெளியான 'மார்கோ' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் இந்த படம் ரூ.100 கோடி வசூலை கடந்து அசத்தியது. 'கே.ஜி.எப்' படத்துக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

இந்தப் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அதிக வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருந்தன. இதுவே படத்தின் மீது சில எதிர்மறையான விமர்சனங்களை எழுவதற்கான முக்கிய காரணமாக அமைந்தது.

இதனையடுத்து 'மார்கோ' படத்தின் வெற்றியை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கான எழுத்து பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இதையடுத்து, வன்முறை காட்சிகள் அதிகம் கொண்ட திரைப்படங்கள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் அதனால் இதுபோன்ற கதைகளில் நடிப்பதை உன்னி முகுந்தன் தவிர்க்க வேண்டும் என விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், நடிகர் உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு 'மார்கோ-2' குறித்த கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், "மன்னித்துவிடுங்கள் சகோதரரே. மார்கோ தொடரை முன்னே கொண்டு செல்வதற்கான திட்டத்தைக் கைவிடுகிறேன். அப்படத்தைச் சுற்றி நிறைய எதிர்மறையான விஷயங்களே இருக்கின்றன. நான் அப்படத்தைவிட சிறந்த மற்றும் பெரிய படத்தைக் கொடுக்க முயற்சி செய்கிறேன். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி" எனத் தெரிவித்தார்.

இதனால் அப்படத்தின் 2 ஆம் பாகத்துக்கு காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் இது ஒரு மோசமான முடிவு என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.