தக்ஃலைப் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு வாரங்களை நிறைவு செய்துள்ள நிலையில், சமீபத்தில் 123 தெலுங்கு பத்திரிகைக்கு இயக்குநர் மணிரத்னம் பேட்டியொன்றினை அளித்துள்ளார். அதில் தக்ஃலைப் திரைப்படத்தின் தோல்வியை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகிய தக் லைஃப் திரைப்படம் உலகம் முழுவதும் (கர்நாடகா தவிர்த்து) ஜூன் 5 ஆம் தேதி வெளியானது.
ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு முக்கிய காரணம், இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் 1987 ஆம் ஆண்டு வெளியான "நாயகன்" படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்தது தான்.
படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்த நிலையில், திரைப்படம் வெளியான திரையரங்குகளில் படத்தின் கட்-அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடி மகிழ்ந்தனர் ரசிகர்கள். ஆனால், படம் ரசிகர்கள் எதிர்பார்பினை பூர்த்தி செய்ததா என்றால், இல்லை என்று தான் கூற வேண்டும்.
படத்தின் முதல் ஷோ முடிந்தது முதலே, திரும்பும் பக்கம் எல்லாம் நெகட்டிவ் விமர்சனங்கள் தான் படத்திற்கு அதிகம் வந்தன. கமல்-சிம்பு-மணிரத்னம்-ரஹ்மான் கூட்டணி என்பதால் பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் அனைத்தும் பொய்த்துப் போனது. இதனால் படத்தையும்-படக்குழுவினரையும் எல்லைத் தாண்டி விமர்சனம் செய்ய தொடங்கினர் ரசிகர்கள்.
படம் திரையில் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூலானது 60 கோடிக்கும் குறைவாகவே வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கமல் நடிப்பில் இதற்கு முன் வெளியாகிய இந்தியன் பார்ட் 2 திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் பலத்த அடி வாங்கியது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் சமீபத்தில் 123 தெலுங்கு பத்திரிகைக்கு இயக்குநர் மணிரத்னம் பேட்டியொன்றினை அளித்துள்ளார். அதில் படம் குறித்து கூறுகையில் "நாயகன் போன்ற மற்றொரு படத்தை எதிர்பார்த்தவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் அந்த மாதிரியான படத்தைச் செய்வது எங்கள் நோக்கமல்ல. நாங்கள் ஒரு புதிய அனுபவத்தைத் தருவோம் என்று நினைத்தோம். ஆனால் ரசிகர்கள் வேறு ஒன்றை எங்களிடமிருந்து எதிர்பார்த்தார்கள். அது ஒரு தவறான புரிதலாக மாறியது" என்று மணிரத்னம் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
கமல் தற்போது அன்பறிவ் இயக்கத்தில் ஆக்ஷன் அதிரடி நிரம்பிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் வெற்றியினை எதிர்நோக்கி கமல் தரப்போடு, ரசிகர்களும் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.