சினிமா

'எல்கேஜி' திரைப்படம் போல்.. ஆர்.ஜே. பாலாஜி அரசியலுக்கு வருகிறாரா?

By Christon
11 Aug 2026, 07:32 PM
அரசியல் ஆசை தனது துளியும் இல்லை என்று நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆர்ஜே, நடிகர், இயக்குநர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் ஆர்.ஜே. பாலாஜி. சமீபத்தில் இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, நடிகர் சூர்யாவுக்கு ஒரு வலுவான கம்பேக் படமாக அமைந்தது. அதனுடன், ரூ.300 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்துச் சாதனை படைத்தது. தற்போது அவர் புதிய கதை ஒன்றையும் எழுதி வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் அரசியல் ஆசை குறித்து அவர் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கல்லூரி நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர், 'எல்.கே.ஜி' படத்தைப் போல நிஜத்திலும் அரசியலுக்கு வருவீர்களா என நேரடியாகக் கேள்வி எழுப்பினார். அதற்குச் சிரித்தபடியே பதிலளித்த ஆர்.ஜே. பாலாஜி, "ஏற்கனவே தமிழ்நாட்டு அரசியலில் நிறைய பேர் வந்துவிட்டார்கள். இன்னும் வந்துகொண்டும் இருக்கிறார்கள். அந்தப் பெரிய கூட்டத்தில் நானும் இணைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? வாய்ப்பே இல்லை" என்றார்.

மேலும், தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் சுத்தமாக இல்லை என்றும், அத்தகைய ஆசையோ திட்டமோ எப்போதுமே இல்லை என்றும் தெளிவாகக் கூறினார். முன்பெல்லாம் அதிக கோபம் வரும் என்றும், இப்போது பக்குவப்பட்டு மாறியிருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், தன் மீது நிலவி வந்த அரசியல் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆர்.ஜே.பாலாஜியின் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏன்னென்றால், கடந்த 2019-ஆம் ஆண்டு இவர் எழுதி நடித்த 'எல்.கே.ஜி' திரைப்படம் அரசியல் பின்னணியில் உருவானதால், அவருக்கு நிஜ வாழ்க்கையிலும் அரசியல் ஆசை இருக்குமோ என்ற விவாதம் தொடர்ந்து நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.