சினிமா

இணையத்தில் கசிந்த 'ஜனநாயகன்' படம்.. இயக்குநர் உருக்கமான வேண்டுகோள்!

By Christon
10 Apr 2026, 11:10 AM
இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம் என இயக்குநர் எச்.வினோத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படம் என எதிர்பார்க்கப்படும் 'ஜன நாயகன்' இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், இணையத்தில் முழு படமும் கசிந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. தணிக்கைக் குழுவின் சான்றிதழ் சிக்கல்கள் மற்றும் சட்டப் போராட்டங்களால் கடந்த ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய இந்தப் படம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில், படத்தின் சில காட்சிகள் மட்டும் இணையத்தில் கசிந்த நிலையில், தற்போது 3 மணி நேர முழுத் திரைப்படமும் சட்டவிரோத இணையதளங்களில் வெளியாகிப் படக்குழுவினருக்குப் பெரும் பேரிடியைக் கொடுத்துள்ளது.

புகார் அளிக்கப் படக்குழு முடிவு

இணையத்தில் மிகத் துல்லியமான தரத்தில் (HD Quality) படம் வெளியாகி இருப்பதால், இது தணிக்கை அலுவலகத்திலிருந்தோ அல்லது படத்தொகுப்பு அறையிலிருந்தோ கசிந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதனை யார் செய்திருப்பார்கள் என்பது குறித்துப் படக்குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து வருவதுடன், இது தொடர்பாகக் காவல்துறையிலும் புகார் அளிக்கத் திட்டமிட்டுள்ளனர். விஜய்யின் அரசியல் வருகைக்கு முந்தைய கடைசிப் படம் என்பதால், அதன் வசூலைப் பாதிக்கச் செய்யவே இத்தகைய சதி வேலைகள் செய்யப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

இயக்குநர் ஹெச். வினோத்தின் உருக்கமான வேண்டுகோள்

படம் இணையத்தில் கசிந்ததைக் கண்டு மனவேதனை அடைந்துள்ள இயக்குநர் ஹெச். வினோத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், "ஒவ்வொரு காட்சியும் ஒருவரின் கனவைத் சுமந்து நிற்கிறது. வெளியீட்டிற்கு முன்பே அது கசிவது உண்மையாகவே வேதனையானது. தயவுசெய்து இணையத்தில் கசிந்துள்ள காட்சிகளைப் பகிராமல், எங்களுக்கு ஆதரவு தாருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.