Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

முத்த மழை கேட்டேன்.. என்ன ஒரு வித்தை: ஜேம்ஸ் வசந்தன் நெகிழ்ச்சி

By MUTHUKRISHNAN
29 May 2025, 01:59 PM
தக் லைஃப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘முத்த மழை” பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், இசையமைப்பாளரும்-நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நபர், காவியக் காதல் கதைகளின் சிற்பி மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன்,சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் நடைப்பெற்றது. படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் தக் லைஃப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘முத்த மழை’ பாடலை பிரபல பின்னணிப் பாடகி சின்மயி பாடியிருந்தார். பாடலின் வரிகள், இசைக்கோர்வை, சின்மயின் குரல் என கேட்போரை கிறங்கடிக்கும் வகையில் அமைந்துள்ளது முத்த மழை பாடல். திரையுலகப்பிரபலங்கள், சினிமா ரசிகர்கள் பலரும் சின்மயி பாடிய காணொளியினை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக காலடி எடுத்து வைத்து, கண்கள் இரண்டாய் பாடலின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்ட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், முத்த மழை பாடல் குறித்தும், ஏ.ஆர்.ரகுமான் குறித்தும் மெய்சிலிர்த்து பாராட்டி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-

“இப்போதுதான் ‘முத்த மழை’ பாடல் கேட்டேன். என்ன ஒரு இசை வித்தை! இதுவரை கேட்டிராத ஒரு புதுக்கலவை!

தாளத்தில் விளையாட்டு - வரிகளில் தமிழ் கொழிப்பு - குரலில் தேனமுது என எப்படி இவர்களை ஒன்றாகச் சேர்த்தார் இவர் என்கிற வியப்பு நமக்கு! இசைஞானம் என்பது ஒன்று. படைப்புத்திறன் (Creativity) என்பது மற்றொன்று. இரண்டும் ஒருசேரக் கொண்டவர் மிகக்குறைவு. Gen-X காலத்தில் ஒரு இளையராஜா. Gen Alpha காலத்தில் ஒரு ரஹ்மான். இசைக்கடலுக்குள் மூழ்கி எழுந்து வரும்போதுதான் இந்த முதிர்வும் சிந்தனையும் பிறக்கும்.

இதைப்போன்றப் பாடல்கள் வெகுஜனத்துக்கு ஒருவித உணர்வையும், இசைக்கலைஞர்களுக்கு மற்றொரு கோணத்தில் பிரமிப்பையும் கொடுக்கும். இப்படிப்பட்டப் புதுமையான சிந்தனைகள் ஒருவரின் தொடக்க காலத்தில் தோன்றும். விதவிதமாகப் புது முயற்சிகள் செய்துபார்க்க உந்தும். நன்றாக இருக்கிறதோ இல்லையோ, எல்லாரும் விரும்புவார்களோ இல்லையோ, புதுமையை முயற்சிக்கிற படைப்பாளிகளுடைய மனநிலை இந்த எண்ணங்களையெல்லாம் கடந்து செயல்படும்.

ஆனால் 33 ஆண்டுகளுக்குப் பிறகும் ரஹ்மானுக்கு இது சாத்தியப்படுவதுதான் வியப்பு. What baffles us is the unique combination, the creative components, and the unwavering spirit behind all these” என தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



முத்த மழை பாடல் தவிர்த்து, தக் ஃலைப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. டிரைலரும் படத்தின் மீதான எதிர்ப்பார்பினை எகிற வைத்துள்ள நிலையில், வருகிற ஜூன் 5 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தக் ஃலைப் திரைப்படம் உலகளவில் வெளியாகவுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.